டெஸ்ட் அணியில் ‘ஷா’வா, ‘கில்’லா?

தினகரன்  தினகரன்
டெஸ்ட் அணியில் ‘ஷா’வா, ‘கில்’லா?

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் இளம் வீரர் பிரித்வி ஷாவா, ஷுப்மன் கில்லா என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி பிப்.21ம் தேதி வெலிங்டன்னில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 2 அணிகளும் விளையாடும் 3 நாட்கள்  பயிற்சி ஆட்டம் இன்று ஹாமில்டனில் தொடங்குகிறது. விராட் கோஹ்லி தலைமையிலான  இந்திய டெஸ்ட் அணியில்  இளம் வீரர்கள் பிரித்வி ஷா(20), ஷுப்மன் கில்(20) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த 2 பேரில் யாருக்கு ஆடும் அணியில் இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. சுமார் 6மாத தடைக்கு பிறகு பிரித்வி ஷா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3ஒருநாள் போட்டியில் முறையே 20, 24, 40 ரன் எடுத்தார். அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆட்டம் மேம்பட்டுள்ளதால் கவனத்தை ஈர்த்துள்ளார்.  அதே நேரத்தில் நியூசிலாந்து ஏ - இந்திய ஏ அணிகள் மோதிய அங்கீகாரமற்ற டெஸ்ட் போட்டிகளில்  ஷுப்மன் கில் 83, 204*, 136ரன் விளாசி கவனிக்க வைத்துள்ளார். அதனால் இந்த  இளம் வீரர்களில் யாருக்கு ஆடும் அணியில் இடம் கிடைக்கும் என்பது விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் நேற்று  பேட்டி ஒன்றில் ஷுப்மன் கில், ‘நாங்கள் இருவரும் ஒரே காலத்தில்தான் அணிக்காக அறிமுகமானோம். அதனால் ஷாவை எனக்கு போட்டியாக நினைத்ததில்லை. அதே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். மேலும் அணியில் யாருக்கு இடம் என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்யும்’ என்று கூறியுள்ளார்.அணி நிர்வாகத்தின் முடிவுதான் இறுதியானது என்றாலும்  பிரித்வி ஷா, ஷுப்மன் கில் இருவருமே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் காணும் வாய்ப்பும் உள்ளது. காரணம் காயம் காரணமாக விலகியுள்ள ரோகித் சர்மாவுக்கு பதில் அணியில் இடம் பிடித்துள்ள மயங்க் அகர்வால் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் இளம் வீரர்கள் இருவருக்குமே ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு, விடை இன்றைய பயிற்சி ஆட்டத்தில் கொஞ்சம் கிடைக்கும்.

மூலக்கதை