மகளிர் டி20 உலக கோப்பை கபில்தேவ் அணிபோல் சாதிக்கும்: பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் கருத்து

தினகரன்  தினகரன்
மகளிர் டி20 உலக கோப்பை கபில்தேவ் அணிபோல் சாதிக்கும்: பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் கருத்து

புதுடெல்லி: ‘உலககோப்பையை முதன்முதலில் வென்ற கபில்தேவ் தலைமையிலான அணியை போல் டி20 மகளிர் உலககோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைக்கும்’  என்று பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் தெரிவித்துள்ளார்.  மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 21ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. அதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி உலக கோப்பைக்கு முன்னதாக பிப்.16ம் தேதி  பாகிஸ்தான், பிப்.18ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் அளித்த பேட்டி  ஒன்றில், ‘இந்திய மகளிர் அணி திறமையான, அனுபவமிக்க  வீராங்கனைகளை கொண்ட அணியாக உள்ளது. அணியில் கிட்டதட்ட பாதி பேர் இளம் வீராங்கனைகள். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஸ்மிரிதி மந்தனா, தானியா பாட்டீயா, தீப்தி சர்மா என பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உணர்ச்சி வசப்பட அதிக வாய்ப்புள்ள டி20 போட்டியில் உணர்ச்சிகளை தவிர்த்து போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.அப்படி செய்து முடித்தால் இந்திய மகளிர் அணி,  1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது போல் முதல்முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும். இந்திய மகளிர் அணி கட்டாயம் கோப்பையை வென்று அந்த வரலாறை படைப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை