ஹாங்காங்குக்கு புதிய இயக்குனர்: சீனா அதிரடி நடவடிக்கை

தினகரன்  தினகரன்
ஹாங்காங்குக்கு புதிய இயக்குனர்: சீனா அதிரடி நடவடிக்கை

பீஜிங்: ஹாங்காங்விவகாரத்தை கவனிக்கும் துறைக்கு சீன அரசு புதிய இயக்குனரை நியமித்துள்ளது. ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை நடத்துவதற்கு வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளடைவில் இந்த போராட்டமானது, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஜனநாயக சுதந்திர போராட்டமாக மாறியது. இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஹாங்காங் மக்களுக்கு போதுமான அளவுக்கு முகக் கவசங்கள் கிடைக்கவில்லை. இதனால், போராட்டங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில், ஹாங்காங் மற்றும் மகாவ் விவகாரத் துறையின் இயக்குனர் ஜங் ஜியாமிங் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருப்பதுடன், புது இயக்குனரையும் சீனா திடீரென நியமித்துள்ளது. சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜியா பலாங், ஹாங்காங் விவகாரத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மிக நெருங்கிய நண்பராவார். ஜிஜியாங் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜின்பிங் இருந்தபோது துணை தலைவராக ஜியா பலாங் 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.  ஏற்கனவே இயக்குனராக இருந்த ஜங் ஜியாமிங், துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை