கோவிட்-19 பிடியில் சீனா ஒரே நாளில் 254 பேர் பலி

தினகரன்  தினகரன்
கோவிட்19 பிடியில் சீனா ஒரே நாளில் 254 பேர் பலி

பீஜிங்: சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட் -19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மட்டும் 254 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் -19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள வுகான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 1115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 1,367 ஆக உயர்ந்துள்ளது. 31 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 254 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது. இதில் 242 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள். மேலும், 15,152 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபெய் மாகாணத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் 440 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 80 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார். இதற்கிடையே, சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை மீட்டு வர தைரியத்துடன் முன்வந்து பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானத்தின் விமானி, ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.கொல்கத்தா வந்த 2 பேருக்கு அறிகுறிபாங்காங்கில் இருந்து நேற்று வந்த பயணிகள் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டனர். அதில், 2  பயணிகளுக்கு கோவிட் வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இருவரும் பெலியகட்டா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீன விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், இந்தியாவில் இருந்து சீனாவிற்கும் விமானங்கள் இயக்கப்படவில்லை. சுற்றுலா கப்பலில் மேலும் 44 பேருக்கு வைரஸ் பாதிப்புஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஜப்பான் சுகாதார துறை அமைச்சர் கட்ஸ்சுனோபு கடோ கூறுகையில், ‘‘கப்பல் ஊழியர் உட்பட புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்,  221 பேருக்கு புதிதாக மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். இதனிடையே, கப்பலில் இருந்த மூத்த பயணி ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இல்லை என சோதனையில் உறுதியானதால், அவர் கப்பலில் இருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.கேரள மாணவர் வீடு திரும்பினார்சீனாவில்  படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்குதான் இந்தியாவில்  முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. முதலில் திருச்சூரை  சேர்ந்த ஒரு மாணவிக்கும், அதன் பிறகு ஆலப்புழா, காஞ்சங்காட்டை சேர்ந்த 2  மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து 3 பேரும் அரசு மருத்துவமனைகளில் தனிவார்டில் சிகிச்சை பெற்று  வந்தனர். இவர்களை தவிர 70க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ்  அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆலப்புழா மாணவருக்கு  6வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததால், அவர் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மூலக்கதை