தீவிரவாத தலைவன் சயீத்துக்கு 11 ஆண்டு சிறை எங்கேயோ இடிக்குதே...? பாகிஸ்தான் மீது இந்தியா சந்தேகம்

தினகரன்  தினகரன்
தீவிரவாத தலைவன் சயீத்துக்கு 11 ஆண்டு சிறை எங்கேயோ இடிக்குதே...? பாகிஸ்தான் மீது இந்தியா சந்தேகம்

இஸ்லாமாபாத்: தீவிரவாதத்துக்கு நிதி திரட்டி வழங்கிய வழக்கில், மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் திடீரென 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததின் பின்னணி குறித்து இந்தியா சந்தேகத்தை கிளப்பி உள்ளது. மும்பையில் கடந்த 2008ல், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். இந்த தாக்குதலுக்குப் பிறகு லஷ்கர் அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து,  ஜமாத் உத் தவா என்ற புதிய அமைப்பை தொடங்கி, அதன் தலைவனாக ஹபீஸ் சயீத் இருந்து வருகிறான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐநா.வும் இவனுடைய அமைப்பிற்கு தடை விதித்துள்ளது.மும்பை தாக்குதல் விசாரணைக்காக சயீத்தை தன்னிடம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தானை இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், மும்பை தாக்குதலில் அவன் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே, தீவிரவாதத்திற்கு துணை போவதாக சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவன் மீது 23 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2 வழக்குகளில் சயீத்துக்கு லாகூர் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்காக பாகிஸ்தானை உலக நாடுகள் பாராட்டும் நிலையில், இந்தியா சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ‘பாரிசில் நாளை மறுதினம், சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை கண்காணித்து வரும், ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’வின் கூட்டம் தொடங்க உள்ளது.அதை கவனத்தில் கொண்டு தான், ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் அவசர அவசரமாக சிறை தண்டனை விதித்திருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது.  ஏனெனில், தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து துணை போவதால், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற வாய்ப்புள்ளது. இதிலிருந்து தப்பிக்கவே, தீவிரவாதத்திற்கு எதிராக நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என வெளி உலகுக்கு காட்டிக் கொள்வதற்காக கண்துடைப்பாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தான் இருந்தால், வரும் நிதி நடவடிக்கை குழுவின் கூட்டத்திலேயே கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நிலை உள்ளது. அப்படி கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால், ஈரானை போல் கடுமையான பொருளாதார தடைகளை அந்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிதியம், உலக வங்கி போன்றவற்றில் இருந்து நிதியுதவியும் பெற முடியாது. இதனால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், மேலும் வீழ்ச்சியை சந்திக்கும்.அமெரிக்கா வரவேற்புஅமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உதவி அமைச்சர் அலைஸ் வெல்ஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘ஹபீஸ் சயீத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மிக முக்கிய நடவடிக்கையாகும். லஷ்கர் இ தொய்பாவையும் அதன் குற்றங்களையும் தடுப்பதற்கான முயற்சி இது. தீவிரவாதத்திற்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பை பாகிஸ்தான் பூர்த்தி செய்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை