தொடர்ந்து லாபம் ஈட்டும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் '

தினமலர்  தினமலர்
தொடர்ந்து லாபம் ஈட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

திருச்சி:‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், நடப்பு நிதியாண்டில், 5,000 கோடி ரூபாயை தாண்டும்,’’ என, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.


இது குறித்து, அவர் நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், 4,171 கோடி ரூபாயை செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. மேலும் நிகர லாபமாக, 168.50 கோடி ரூபாயை ஈட்டியது.


கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, மூன்றாவது காலாண்டில், செயல்பாட்டு வருவாயாக, 4,235 கோடி ரூபாயை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில், செயல்பாட்டு வருவாய், 5,000 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிறுவனம் துவங்கிய அடுத்த ஆண்டிலிருந்தே, திருச்சியில் இருந்து விமான சேவை அளிக்கப்படுகிறது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், சார்ஜா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அடுத்து அபுதாபி, தோகா போன்ற நாடுகளுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.-

மூலக்கதை