கைநழுவும் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் :இந்தியாவின் வாசலுக்கு வரும் வாய்ப்புகள்

தினமலர்  தினமலர்
கைநழுவும் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் :இந்தியாவின் வாசலுக்கு வரும் வாய்ப்புகள்

கோவை:உலகையே அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ், ஒட்டு மொத்தமாக சீனாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அந்நாட்டின் தொழில், சர்வதேச வர்த்தகம், சுற்றுலா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


இன்னொரு பக்கம் இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வரும் சீனா, உலகின் மொத்த ஜவுளி ஏற்றுமதி சந்தையில், 34 சதவீதத்தை கைவசம் வைத்திருக்கிறது.


காலணி ஏற்றுமதி சந்தையில், 39 சதவீதம்; தோல் பொருட்கள் ஏற்றுமதியில், 26 சதவீதம்; மின் பொருட்கள் சந்தையில், 20 சதவீதம்; பிளாஸ்டிக், ரப்பர் ஏற்றுமதி சந்தையில், 11 சதவீதம் என, பல பொருட்களின் ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்கிறது.


இவை தவிர, ஒளிபரப்பு சாதனங்கள், கம்ப்யூட்டர்கள், இயந்திரங்கள், போன்கள், மின்னணு சர்க்யூட்கள், இரும்புத்தாது, காய்கறிகள், உணவுப் பொருட்கள், ரசாயனம், மரம், கண்ணாடி, உலோகங்கள் என பலவற்றை ஏற்றுமதி செய்கிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல், அந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை தற்போது நிலைகுலைய வைத்து உள்ளது.


இதைஅடுத்து, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை அணுக துவங்கியுள்ளனர். இது குறித்து, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:


சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், வர்த்தக ரீதியாக மற்ற நாடுகளுக்கு சில ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வியட்னாம், தன் உற்பத்திக்கு தேவையான, 40 சதவீதம் மூலப்  பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதில் பெரும்பகுதி சீனாவில் இருந்து வருகிறது.நோய் பாதிப்பால், சீனாவில் இருந்து பொருட்கள் வாங்க முடியாதது, தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாதது போன்ற சிரமங்களால், வியட்னாம் நாடு குறித்த காலத்தில், 'ஆர்டர்'களை அனுப்பி வைக்க முடியாது. இதனால், மற்ற நாடுகளுக்கு வியாபார வாய்ப்புகள் வருகின்றன.



செலவுகள் அதிகரிப்பு


இந்தியாவுக்கும் வாய்ப்புகள் வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளித் துறையினருக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், இந்த போக்கு எப்படி இருக்கும் என்பதை தற்போதைய நிலையில் முடிவு செய்ய முடியாது. பொதுவாகவே, சீனாவின் போட்டியிடும் திறன் குறைந்து வருகிறது. அங்கு உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டன.


இது போன்ற காரணங்களால், அந்நாட்டின் பங்களிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. கடந்த, 11 மாதத்தில் மட்டுமே, அமெரிக்க சந்தையில், 10 சதவீதத்தை சீனர்கள் இழந்துள்ளனர். போட்டியிடும் திறன் குறைந்து போனதும், அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவுகளும் இதற்கு முக்கிய காரணம். இதை, ஒரு நீண்ட கால வாய்ப்பாக இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டும்.


வேலை வாய்ப்பு


இந்தியா, 37 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்கிறது. சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் வளர்ச்சியின்றி இதே நிலையில் இருக்கிறது. 7,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி அதிகரித்தால், 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை