பட்டியலின மாணவர்கள் மூலம் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு...துறைரீதியாக நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பட்டியலின மாணவர்கள் மூலம் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு...துறைரீதியாக நடவடிக்கை

கோவை: பட்டியலின மாணவர்கள் மூலம் கழிவறையை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து  வருகின்றனர். தலைமை ஆசிரியராக குமரேஷ்வரி பணியாற்றி வருகிறார்.

5ம் வகுப்பில் படிக்கும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களை, பள்ளி  கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம்  தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியரை வேறு  பள்ளிக்கு மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை குமரேஷ்வரி கட்டாய விடுப்பில்  அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘நேற்று முன்தினம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி  ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனால் இந்த விவகாரம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஹெச். எம்.

2  நாட்கள் கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

புதிய கல்வி அதிகாரிகள் பதவியேற்றவுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்கப்படும்’’ என்றனர்.

.

மூலக்கதை