மாமியாருடன் சண்டையில் வீட்டைவிட்டு வெளியேறினார்: வனப்பகுதியில் பசி, தாகத்தால் தவித்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி...ஆந்திராவில் துயரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாமியாருடன் சண்டையில் வீட்டைவிட்டு வெளியேறினார்: வனப்பகுதியில் பசி, தாகத்தால் தவித்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி...ஆந்திராவில் துயரம்

திருமலை: மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டைவிட்டு வெளியேறி அடர்ந்த காட்டில் தவித்த  பெண், உணவு கிடைக்காமல் குழந்தையை பறிகொடுத்தார். இந்த  விரக்தியில், அவர் கல்லால் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெந்துர்த்தியை சேர்ந்தவர் அப்பாராவ்(35).

இவரது மனைவி சுமலதா(30). இவர்களுக்கு 2 பெண்  குழந்தைகள்.

பெங்களூருவில் வசித்துவந்த இவர்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த 6ம் தேதி சுமலதாவுக்கும் அவரது மாமியாருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு சுமலதா தனது 2 வயது பெண்  குழந்தை ஞானசாவுடன் வீட்டைவிட்டு வெளியேறி அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

அவரது குடும்பத்தினர், சுமலதாவை பல இடங்களில் தேடியும்  கிடைக்காததால், பெந்துர்த்தி போலீசில் அப்பாராவ் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், போலீசார் வனப்பகுதிக்கு சென்று தாய், மகளை தேடி வந்தனர்.    நேற்றுமுன்தினம் மாலை காட்டுப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் சுமலதாவை பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரது கழுத்து, கை  ஆகியவற்றில் வெட்டுக்காயங்கள் இருந்தது. குழந்தை ஞானசாவை காணவில்லை.

இதுகுறித்து அறிந்ததும் போலீசார் சென்று சுமலதாவிடம் விசாரித்தபோது, ‘’காட்டுப் பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் தாகத்தாலும் பசியாலும் தவித்த  குழந்தை ஞானசா இறந்து விட்டதாகவும் குழந்தையை காட்டுப்பகுதியிலேயே புதைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கருதி கழுத்து,  கை ஆகிய உடல் பகுதிகளில் கூறிய கற்களால் தாக்கிக் கொண்டேன்’ என்று கூறினார்.

இதையடுத்து சுமலதாவை அழைத்துக்கொண்டு, புதைக்கப்பட்ட  குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பசி, தாகத்தால்தான் குழந்தை இறந்ததா, அல்லது சுமலதா அடித்துக்கொலை செய்துவிட்டு ஏமாற்றுகிறாரா  என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை