பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டதால் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு ஒருமுறை செல்வதற்கு மட்டுமே அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டதால் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு ஒருமுறை செல்வதற்கு மட்டுமே அனுமதி

வேலூர்: டோல்கேட்டில் பாஸ்டேக் அமல் எதிரொலி தொடர்ந்து பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள்  உள்ளன.

இவற்றை சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும்  பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறை சம்பவங்களை  தவிர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ரொக்கமாகபணம் வசூலிக்கும் முறை கைவிடப்படுகிறது.

அதற்குப் பதிலாக பாஸ்டேக் எனப்படும்  மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அரசு மற்றும்  தனியார் வங்கிகள், பே டிஎம் போன்ற இணையதளங்கள் வழியாக பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கிக் கொள்ளலாம்.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் டோல்கேட்டில்  செல்லும்போது, சிங்கின் எண்டரி மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் திரும்பி வருவதற்கு சேர்த்து பில் கேட்டால், டோல்கேட்டில் பணியாற்றும்  ஊழியர்கள் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்களில்  செல்பவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பாஸ்டேக் முறை எதிரொலியாக தற்போது டோல்கேட்டில் சிங்கிள் என்டரிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.   பள்ளிகொண்டா டோல்கேட்டில் ஒருமுறை கடக்க கார்களுக்கு ₹85 வசூலிக்கப்படுகிறது.

ஆனால் முன்பு குறிப்பிட்ட நேரத்தில் சென்று திரும்பும் கார்களுக்கு ரூ. 130  கட்டணமாக வசூலித்து வந்தனர்.

தற்போது சிங்கிள் என்டரி மட்டுமே என்பதால் ஒரு வாகனத்துக்கு ₹40 முதல் ₹100 வரை கூடுதலாக செலவு ஏற்படுகிறது.   மீண்டும் பழைய முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றனர். டோல்கேட் ஊழியர்கள் கூறுகையில், ‘பாஸ்டேக் முறையை முழுவதுமாக செயல்படுத்தும் வகையில் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி  மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கு டபுள் என்டரி தொடர்ந்து வழங்கப்படுகிறது’ என்றனர்.

.

மூலக்கதை