கணக்குகளை ஆன்லைனில் பதிவேற்றாத 4 ஊராட்சி செயலாளர்கள் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கணக்குகளை ஆன்லைனில் பதிவேற்றாத 4 ஊராட்சி செயலாளர்கள் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஒன்றியத்தில், ஊராட்சி செலவின கணக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாத 4 ஊராட்சி செயலாளர்களை சஸ்பெண்ட் செய்து  திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்த்  தலைமையில் நடந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உடனடியாக கணக்குகளை ஒப்படைக்க  வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்,  கையிருப்பில் உள்ள காசோலைகளை ஒப்படைத்துவிட்டு, ஆன்லைன் மூலம் பண பறிமாற்றங்களை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு கிராம ஊராட்சியாக அதிகாரிகள் பதிவேடுகளை தணிக்கை செய்தனர்.

அதில், அண்டம்பள்ளம், மலப்பாம்பாடி, கல்லேரி மற்றும்  பவித்திரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் முறையாக ஆன்லைனில் கணக்குகளை பதிவேற்றம் செய்யாதது தெரியவந்தது.

மேலும், அதிகாரிகள் நடத்திய  ஆய்வுக்கூட்டத்திலும் நான்கு ஊராட்சி செயலாளர்களும் பங்கேற்கவில்லை.

எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்த், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், ஊராட்சி செயலாளர்கள் அண்டம்பள்ளம் வசந்தி, மலப்பாம்பாடி  பாலசுப்பிரமணியன், கல்லேரி பச்சையப்பன், பவித்திரம் ேராஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

.

மூலக்கதை