சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழங்காத பத்திரப்பதிவு சி.டி.யை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சார்பதிவாளர் அலுவலகங்களில் வழங்காத பத்திரப்பதிவு சி.டி.யை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர்: நிலம், வீடு, மனைப்பதிவு போன்றவை விற்பனை செய்யப்படும்போது, விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு  செய்து சொத்துப்பத்திரம் வழங்கப்படும். இதில் முறைகேடுகள் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பத்திரப்பதிவின் போது, நடைபெறும்  நிகழ்வுகளை, சி. டி. யில் பதிவு செய்து, சொத்து வாங்குபவர்களுக்கு வழங்கப்படும்.

இதற்காக பத்திரப்பதிவு கட்டணத்துடன் ரூ. 50 வசூலிக்கப்பட்டு வருகிறது.   ஆனால், அரசின் ஆணைப்படி, இதுவரை யாருக்கும் சி. டி. வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.



‘திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில், செயல்படாத, ‘வெப் கேமரா’க்களை நம்பி, சி. டி. கட்டணமாக, ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும்  ரூ. 50 வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் திருவள்ளூர், மணவாளநகர், திருத்தணி, ஆர். கே. பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை,  ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி என, 14 இடங்களில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களில், சொத்து பரிமாற்றங்களில் ஆள்மாறாட்டம், மோசடிகள் நடப்பதை தடுக்க, பத்திரப்பதிவு நடவடிக்கைகளை, வீடியோ பதிவு செய்ய முடிவு  எடுக்கப்பட்டது.

இதற்காக, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், ‘வெப்’ கேமரா நிறுவப்பட்டது. கேமராக்களை இயக்கவும், பத்திரப்பதிவு நிகழ்வுகளை, சி. டி. யில் பதிவு செய்து தரவும், தனியார் நிறுவனம் வாயிலாக, ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர்.   ஒவ்வொரு பதிவுக்கும், ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த பணிக்காக நிறுவப்பட்ட, ‘வெப் கேமரா’க்கள் செயல்படாததால், பத்திரப்பதிவு செய்தவர்களிடம்  கட்டணம் வசூலித்தாலும், சி. டி. வழங்கப்படுவதில்லை.



இவ்வாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 14 சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஒரே ஆண்டில்  மட்டும் வழங்கப்படாத சி. டி. கட்டணமாக ரூ. 16 லட்சம் வரை சராசரியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படாத சி. டி. க்களின் விலையை, பிப் 1 முதல் ரூ. 100 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.

எனவே,  பயனாளிகள் நலன்கருதி முறையாக பத்திரப்பதிவு சி. டி. யை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

மூலக்கதை