சீனாவில் இருந்து வந்த இளையான்குடி வாலிபருக்கு கொரோனா?: சிவகங்கை ஜிஹெச்சில் அட்மிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் இருந்து வந்த இளையான்குடி வாலிபருக்கு கொரோனா?: சிவகங்கை ஜிஹெச்சில் அட்மிட்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோட்டையூரை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (35). சீனாவில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் அவர், கடந்த 4ம் தேதி  சென்னைக்கு வந்தார்.   சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் தெய்வேந்திரனுக்கு சென்னையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இவருக்கு கொரோனா  பாதிப்பு இல்லை என்ற நிலையில், சொந்த ஊரான கோட்டையூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், சில நாட்களாக கடும் குளிர் காய்ச்சல், வாந்தியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகும் தெய்வேந்திரன்  மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் கூறுகையில், ‘‘சீனாவில் மருத்துவ படிப்பு, பணி தொடர்பாக சென்று மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கு  வருகை தந்த 84 நபர்கள், விமான நிலையங்களிலேயே முழுமையாக பரிசோதனைக்கு பின்தான் அவரவர் வீடுகளுக்கு சென்று  உள்ளனர்.

அவர்களை  மருத்துவத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கிடையாது.   தெய்வேந்திரனுக்கு சாதாரண காய்ச்சல், வாந்தி இருந்தது.

அவருக்கு அனைத்து பரிசோதனையும் செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் இல்லை என  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்றார்.

சீனாவில் இருந்து வந்த இளையான்குடி அருகே சீவலாதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர், நல்ல உடல்நிலையில் உள்ளார் இருப்பினும் அவரை தொடர்ந்து  கண்காணித்து வருகிறோம்’ என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

.

மூலக்கதை