புழல் பகுதியில் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசும் ஏரிக்கரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் பகுதியில் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசும் ஏரிக்கரை

புழல்: புழல் பகுதியில் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழலேரியில் சுமார் 2 கிமீ தூரமுள்ள ஏரிக்கரை முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் கடும்  துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த ஏரிக்கரையை உடனடியாக சீரமைக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி.

தற்போது அதன் நீர்  இருப்பு 2784 மில்லியன் கன அடி. இதில், சென்னை நகர மக்களின் தேவைக்காக விநாடிக்கு 87 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

  இந்த புழல் ஏரியின் கரைகள் செங்குன்றம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாரவாரிகுப்பம், திருவள்ளூர்  நெடுஞ்சாலை, ஆலமரம் பகுதிவரை சுமார் 2 கிமீ தூரத்துக்கு பரந்து விரிந்துள்ளன.

எனினும், இந்த ஏரிக்கரை முறையான பராமரிப்பின்றி, தற்போது முற்றிலும்  சேதமடைந்து, முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.   இந்த ஏரிக்கரையில் பலர் நீண்ட காலமாக காலைக்கடன் கழித்து வருவதால், அப்பகுதி முழுவதும்  கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கொசு உற்பத்தி அதிகமாகி, அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல்கள் மற்றும்  நோய்தொற்றை ஏற்படுத்தி வருகிறது.

  எனவே, புழல் ஏரியை சுற்றியுள்ள அதன் கரைகளை விரைவில் சீரமைத்து, அங்கு பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு பாதுகாக்கவும், ஏரிக்கரையில்  பொது கழிப்பிடம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை