பிரசவத்தில் தாயும், குழந்தையும் பலியான வழக்கு திருவள்ளூர் டாக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.10 லட்சம்: மனித உரிமை ஆணையம் தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரசவத்தில் தாயும், குழந்தையும் பலியான வழக்கு திருவள்ளூர் டாக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.10 லட்சம்: மனித உரிமை ஆணையம் தீர்ப்பு

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்(26), இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக  பணியாற்றினார். இதே கம்பெனியில் வேலை செய்து வந்த விஜயமங்களம் பகுதியை சார்ந்த காஞ்சனாவை (23) கடந்த இரண்டு வருடத்திற்கு முன் காதல்  திருமணம் செய்து கொண்டார்.

வளைகாப்பு முடிந்து விஜயமங்களத்தில் உள்ள தந்தை வீட்டில் இருந்து, விஜயமங்களம் அரசு மருத்துவமனையில் மாதாந்திர  பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 2018 நவம்பர் 29ம் தேதி காஞ்சனாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே விஜயமங்களம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்,  விஜயலட்சுமி பகல் 11 மணிக்கே வீட்டுக்கு சென்று விட்டார்.

 மாலையில் காஞ்சனாவிற்கு வலி அதிகரிக்கவே பணியில் இருந்த செவிலியர் சுகன்யா பிரசவம்  பார்த்தபோது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்து உடல் வரவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் போராடிய செவிலியர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம்  திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கும் பணியில் இருக்க வேண்டிய இரண்டு மருத்துவர்களும் இல்லாததால், அந்த  பெண்ணின் நிலையை பார்த்து விட்டு அங்கிருந்த செவிலியர் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அதற்குள் நிலைமை  மோசமாகவே ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.   வயிற்றில் இருந்த ஆண் சிசுவும் இறந்து விட்டது.

இதுபற்றி மாநில மனித உரிமை ஆணையம் சுகாதாரதுறையிடம் விளக்கம் கேட்டு தாமாக முன் வந்து இவ்வழக்கை விசாரித்தது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு  அளிக்கப்பட்டது.
பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த மருத்துவர் விஜயலட்சுமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட கணவனுக்கு 10 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காஞ்சனா இறப்புக்கு காரணமான மருத்துவர் விஜயலட்சுமி உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

அபராதம் விதிக்கப்பட்ட மருத்துவர் விஜயலட்சுமி தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்து  வருகிறார். இதுகுறித்து காஞ்சனாவின் கணவன்ராஜ் கூறுகையில், ‘கடந்த இரண்டு வருடமாக இவ்வழக்கு நடைபெற்று தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.   தீர்ப்பு தமக்கு ஆறுதல் அளிக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை