திருமுல்லைவாயலில் நாகம்மை நகர் ஏரி ஆக்கிரமிப்பு கழிவுநீர் கலப்பதால் மக்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமுல்லைவாயலில் நாகம்மை நகர் ஏரி ஆக்கிரமிப்பு கழிவுநீர் கலப்பதால் மக்கள் அவதி

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 13வது வார்டில், திருமுல்லைவாயல், நாகம்மை நகர் ஏரி உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஏரி, தேவி நகர், நாகம்மை நகர், ரவீந்திரன் நகர், அந்தோணி நகர், இ. எஸ். ஐ அண்ணாநகர், ஜெ. பி நகர்,  ரயில்வே குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏரி மூலம் பல  ஏக்கர் விவசாயம் நடந்தது.

இதன் பிறகு, ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏரிக்கு வரும்  நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

இதனால் விவசாயமும் நாளுக்கு நாள் நலிவடைந்தது. இதன் பிறகு, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி  குடியிருப்புகளானது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பொய்த்ததால் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அரங்கேறியது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாகம்மை நகர்  ஏரியை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், ஏரிக்கு வரும் மழைநீர்  கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், ராட்சத மேல்நிலை தொட்டியும், நீரேற்று நிலையமும் கட்டப்பட்டுள்ளது.

ஆவடி நகராட்சி நிர்வாகமாக  இருந்தபோது, ஏரியை ஆக்கிரமித்து பூங்கா, வார்டு அலுவலகம், நம்ம டாய்லெட் (கழிப்பறை) ஆகியவற்றையும் கட்டியுள்ளனர். தற்போது, 7 ஏக்கர் பரப்பளவு  மட்டுமே கொண்டதாக உள்ள ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சமீபகாலமாக, நாகமணி நகர் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்  தற்காலிக கால்வாய் வழியாக ஏரியில் விடப்படுகிறது. மேலும், ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் இருந்தும் செப்டிக் டேங்க் உள்ளிட்ட  கழிவுகள் விடப்படுகிறது.



இதனால், ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இதனால் சுற்றுப்புற வீடுகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்காக  தனியார் டிராக்டர்களில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ. 10 க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியை பாதுகாக்காவிட்டால், இன்னும் சில  ஆண்டுகளில் நிலத்தடி நீர் இல்லாமல் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கின்றனர்.

 இதன் விளைவாக, ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து மாயமாகி வரும்  நிலை உள்ளது. மேலும், கழிவுநீரும் அதிகளவில் ஏரியில் கலந்து மாசு ஏற்பட்டு வருகிறது.

இதனால், துர்நாற்றத்தால் அவதிப்படுகிறோம். மேலும், கொசுக்களால்  அவதிப்படுகிறோம்.

இதன் காரணமாக மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுகிறோம்.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், நாகம்மை  நகர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

.

மூலக்கதை