திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 3 நாள் தெப்ப உற்சவம் துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 3 நாள் தெப்ப உற்சவம் துவக்கம்

பூந்தமல்லி: சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில், கடந்த ஜனவரி 30ம் தேதி பிரமோற்சவ நிகழ்ச்சி  கொடியேற்றத்துடன் துவங்கியது.   இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் மற்றும்  ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 5-ம் தேதி தேரோட்டம், 8-ம் தேதி பல்லக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,  தைப்பூச ஏகதின லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  நேற்று மாலை 3 நாள் தெப்ப உற்சவ நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது.

இதையடுத்து, கருமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில்  இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பூந்தமல்லி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி. டி. அம்பிகா,  முன்னாள் அறங்காவலர் டி. ரமேஷ், அரிமா சங்க நிர்வாகிகளான ஏகேஎஸ். குமார், ஏகேஎஸ். சரவணன், டி. ஜெயக்குமார் மற்றும் உபயதாரர் சுந்தரமூர்த்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெப்ப உற்சவ புறப்பாடுக்கு முன்பு அம்மன் அலங்கார பல்லக்கில் கோவில் பிரகாரத்தையும் குளத்தையும் சுற்றி வந்ததும் தெப்ப உற்சவம் துவங்கியது. முதல்  நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

  இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் தெப்ப உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

வரும் 16-ம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 17-ம்  தேதி விடையாற்றி உற்சவ நிகழ்ச்சி, 18-ம் தேதி உற்சவ அம்மனுக்கு பிரம்மோற்சவ சாந்தி அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை, நிர்வாக அதிகாரிகள் கண்ணன், மலைச்சாமி, அண்ணாமலை, விஜிலா ராணி,  செந்தில்குமார், சுசில்குமார், க. மணிகண்ட குருக்கள், பா. மணிகண்ட குருக்கள், சரவண குருக்கள், சூரஜ் குருக்கள் மற்றும் துரைராஜன், வேலு, சடகோபி,  சதாசிவம், கணேசன், சபரி சிறப்பாக செய்து வருகின்றனர்.

தெப்ப உற்சவ பாதுகாப்பு பணியில் பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் ஏராளமான  போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

.

மூலக்கதை