கெஜ்ரிவால் 16ம் தேதி முதல்வராக பதவியேற்பு 7 அமைச்சர்களுக்கும் அதே இலாகா...விருந்தினர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கெஜ்ரிவால் 16ம் தேதி முதல்வராக பதவியேற்பு 7 அமைச்சர்களுக்கும் அதே இலாகா...விருந்தினர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

புதுடெல்லி: டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் 16ம் தேதி பதவியேற்கிறார். ஏற்கனவே பதவியில் இருந்த 7 அமைச்சர்களுக்கும் அதே இலாகா ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படும் விருந்தினர் பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடக்கிறது. டெல்லி சட்டபேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வென்றது.

ஆம் ஆத்மி சார்பில் களமிறக்கப்பட்ட 9 பெண்களில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் அதிஷி (38).

இவர் கல்வித் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆலோசகராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அதுபோல் எம்எல்ஏ ராகவ் சத்தாவும் நிதித் துறை ஆலோசகராக இருந்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்பதால், மேற்கண்ட இருவருக்கும் இந்த அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.   கடந்த முறை இருந்த 7 அமைச்சர்களும் நிச்சயம் இந்த முறை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

காரணம், இவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். வரும் 16ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறை முதல்வராக பதவியேற்கிறார்.

இந்த அமைச்சரவை அப்படியே இந்த முறையும் தொடர்ந்தால் புதிய அரசில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்கள் மணீஷ் சோடியா, சதேந்திரா ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோர் இடம்பெறுவர். இவர்களது துறைகள் பின்னர் அறிவிக்க வாய்ப்புள்ளது.



துணை முதல்வராக இருந்த மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தொடர்ந்து அதே பதவியில் இருப்பார் என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்விழாவில் பங்கேற்க ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மணீஷ் சிசோடியா கூறுைகயில், ‘‘டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் வந்து கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க அழைக்கப்படுகிறார்கள்” என்றார்.

கடந்த இரண்டு தடவைகளை விட இம்முறை பதவியேற்பு விழா பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவிற்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் பட்டியலை கட்சி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை