டெல்லி தேர்தல் தோல்வியால் மூத்த தலைவர்களுக்குள் மோதல்: ஏப்ரலில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம்?: உடல்நலக் குறைவால் சோனியா காந்தி ஓய்வு...ராகுலை மீண்டும் தலைவராக்க தீவிர முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி தேர்தல் தோல்வியால் மூத்த தலைவர்களுக்குள் மோதல்: ஏப்ரலில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம்?: உடல்நலக் குறைவால் சோனியா காந்தி ஓய்வு...ராகுலை மீண்டும் தலைவராக்க தீவிர முயற்சி

புதுடெல்லி: டெல்லி தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் சோனியா காந்தி ஓய்வு எடுத்து வரும்நிலையில், வரும் ஏப்ரலில் காங்.

தலைமையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மீண்டும் ராகுலை கட்சியின் தலைவராக்க தீவிர முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதோடு, பகிரங்கமாக உள்நோக்கத்துடன் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் டெல்லி காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளர் பி. சி. சாக்கோ, முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷர்மிஸ்டா முகர்ஜி, டெல்லி காங்கிரஸ் கமிட்டி செயற்குழு நிர்வாகி தேவேந்தர் யாதவ், காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா,
மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் உதவியாளர் பவன் கெரா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், மிலிந்த் தியோரா என்று பட்டியல் நீள்கிறது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அப்போது தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இடைக்கால தலைவராக ேசானியா காந்தி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார்.

இவரது மகளான பிரியங்கா காந்தி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தும், அவர் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு சென்று மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவர்களுடன் போராட்டங்களில் பங்கேற்கிறார். இருந்தும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், கட்சித் தலைமையை யார் ஏற்பது? என்று கேள்வி எழுந்துள்ளது.இதுதொடர்பாக வருகிற ஏப்ரல் 2வது வாரத்தில் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சோனியா காந்தி கட்சித் தலைவராக நிரந்தரமாக நீடிப்பாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இருந்தும், இந்த முறை காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பதவியேற்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என, ஒருசில தலைவர்களை தவிர பெரும்பாலான தலைவர்கள் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

இருந்தும் ராகுலை மீண்டும் தலைவராக்கும் முயற்சிகள் நடப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சோனியா காந்தியின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால், அவர் டெல்லி மருத்துவமனையில் ஒரு சில நாட்கள் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து கட்சி தலைமை குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக மூன்று தடவை டெல்லியை ஆண்ட காங்கிரஸ், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்தது. அதுவும் இந்த முறை 66 இடங்களில் போட்டியிட்டும் 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அதனால், டெல்லி பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் 134 ஆண்டுகால வரலாற்றில், நேரு குடும்பத்தினரே அதிகபட்சமாக கட்சியின் தலைமை பதவிகளில் இருந்தனர்.

முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்பதால், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்குப் பின் சோனியா காந்தி கட்சி தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக கட்சித் தலைவராக பணியாற்றிய சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி கட்சித் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தனது அரசியல் ஈடுபாடுகளை கணிசமாகக் குறைத்துக் கொண்டார்.

ஆனால், 2019ல் ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியதால், கட்சியின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவர் தயக்கத்துடன் இடைக்கால தலைவராக ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை