குற்ற விவரங்களை செய்தித்தாளில் வெளியிடும் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிபிடி...வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்ற விவரங்களை செய்தித்தாளில் வெளியிடும் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிபிடி...வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை

புதுடெல்லி:  குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களின் விவரங்களை செய்தித்தாளில் வெளியிடக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிபிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.   கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அதுகுறித்த விவரங்களை செய்தித்தாள்களில் கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும்; இதனை தலைமை தேர்தல் ஆணையம்  கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. ஆனால், 2014ல் வந்த தீர்ப்புக்கு பின் எந்த ஒரு அரசியல் கட்சியும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்த குற்ற விவரங்களை பொது தளங்களில் வெளியிடவில்லை.

தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலான, முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்ச  நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்த வலிமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்; குற்றப்பின்னணி வேட்பாளர்கள் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிடும் முயற்சியில் போதிய பலன் கிடைக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவில், ‘குற்றப்பின்னணி உள்ள ேவட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. ஆனால், சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்குகிறது.

அதன்படி, குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் யார்? என்பதை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கட்சி தலைமை பொது தளத்தில் (செய்திதாள், சமூகவலைதளம்) வெளியிட வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் இதனை கண்காணிக்க வேண்டும்.

குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது உறுதி செய்யப்படும்பட்சத்தில் தேர்தல் ஆணையம் 72 மணி நேரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அல்லது சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளரை ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதித்தோம் என்பதற்கு, சம்பந்தப்பட்ட கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் வெறும் வெற்றிக்காக மட்டும்தான் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதை கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள், தன் மீதான குற்றப்பின்னணி விவரங்களை பொது தளத்தில் வெளியிட வேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படாதபட்சத்தில், தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமே உடனடியாக முறையிடலாம்’ என்று இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை