166 பேரின் படுகொலைக்கு காரணமானவன் தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 11 ஆண்டு சிறை தண்டனை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
166 பேரின் படுகொலைக்கு காரணமானவன் தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 11 ஆண்டு சிறை தண்டனை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

லாகூர்: மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்த 2 வழக்குகளில் 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத்தவா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். கடந்த 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான். இதில், 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாகினர். இதையடுத்து, இவனை உலகளவில் தேடப்படும் முக்கிய தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் அரசு தீவிரவாத வழக்குகளை பதிவு செய்தது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தது,  பண பரிமாற்ற மோசடி ஆகியவற்றின் கீழ், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் அவனுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் வீதம், மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மூலக்கதை