தலைநகர் டெல்லியில் மூன்றாவது முறையாக பிப். 16ல் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பு...ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைநகர் டெல்லியில் மூன்றாவது முறையாக பிப். 16ல் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பு...ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு தீவிரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி முதல்வராக வரும் 16ம் தேதி பதவியேற்க வசதியாக சட்டமன்ற கட்சி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னதாக, ஆட்சியமைக்க உரிமை கோரி டெல்லி ஆளுநரை கெஜ்ரிவால் சந்தித்தார்.

ராம்லீலா மைதானத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை வென்றதன் மூலம் மகத்தான வெற்றியைப் பெற்றது.

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல், ‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்’ என்று டுவிட் பதிவிட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லி கவர்னர் அனில் பைஜலை சந்தித்தார்.

அப்போது, டெல்லியில் தங்களது கட்சி ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரினார்.

பதவியேற்பு நாள் குறித்து கவர்னருடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கெஜ்ரிவாலின் இல்லத்தில் கட்சியின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் மாலையில் நடக்கிறது.

அப்போது, சட்டமன்றக் கட்சியின் தலைவராக கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். பிப்.

16ம் தேதியில் டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடக்கவுள்ளதால், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி, 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

 இந்தத்  தேர்தலில் பாஜக 8 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத  வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

கடந்த  தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி  பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.   காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றாலும்கூட, அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுக்க இன்னும் நேரம் தேவைப்படும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சி தற்போது தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது 2017ல் பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் தோல்வியுற்றதால், அக்கட்சியின் தேசிய அளவிலான விருப்பம் நிறைவேறவில்லை.

இருந்தும், 2014ல் பஞ்சாபில் நான்கு மக்களவை இடங்களையும், 2019ல் ஒரு இடத்தையும் வென்றது. அதேநேரத்தில் டெல்லி வாக்காளர்கள் இரண்டு மக்களவை தேர்தலிலும் ஆம்ஆத்மியை நிராகரித்தனர்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கெஜ்ரிவால் 2014ம் ஆண்டில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனால், தலைநகர் டெல்லி அரசியலில் கவனம் செலுத்தினார்.



கெஜ்ரிவால் கட்சியின் வளர்ச்சி குறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘கெஜ்ரிவால் ஒரு அகில இந்தியத் தலைவராக வருவதற்கு இன்னும் நிறைய கடக்க வேண்டியுள்ளது. அவர் டெல்லி மக்களுக்கு செய்திருப்பதை நாடே கவனிக்கிறது.

அதனால் அவர் தேசிய தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதால், பாஜகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

.

மூலக்கதை