இணையத்தில் வைரலாகும் ‘குட்டி கெஜ்ரிவால்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
இணையத்தில் வைரலாகும் ‘குட்டி கெஜ்ரிவால்’

புதுடெல்லி: டெல்லி தேர்தல் முடிவுகள் ஆம்ஆத்மிக்கு சாதகமான நிலையில், அக்கட்சியின் வெற்றி ஆரவாரங்கள் மத்தியில் தனித்த முகமாக சமூக ஊடகங்களில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட தொண்டர்கள் அந்தச் சிறுவனை ‘குட்டி கெஜ்ரிவால்’ எனத் தூக்கிக் கொஞ்சி வந்தனர்.

அதற்கு ஏற்ப அந்தச் சிறுவன் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று தொப்பி, மூக்குக் கண்ணாடி மற்றும் மப்ளருடன் வலம் வந்தான். அந்தச் சிறுவனுடன் சேர்ந்து பலரும் செல்பி எடுத்து வந்தனர்.இந்தப் பெரும் பரபரப்புக்கு இடையிலும் சற்றும் சளைக்காமல் அந்தச் சிறுவன் உற்சாகமாக ஆட்டம் போட்டதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. அவனைச் சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வந்தன.

இந்தச் சிறுவனின் புகைப்படத்தை, ஆம் ஆத்மி கட்சியும் ‘மப்ளர் மேன்’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிவப்பு சொட்டர், கருப்பு மப்ளர், குட்டி மீசை, மூக்குக் கண்ணாடி என தோற்றமளித்த அந்தச் சிறுவனின் புகைப்படம் ட்விட்டரில் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் விரும்பியுள்ளனர்.

‘நெட்டிசன்கள் பலரும் இந்தக் குட்டி கெஜ்ரிவாலை ‘சோ க்யூட்’ எனவும் பாராட்டி வருகின்றனர்.

.

மூலக்கதை