முதல்நாளில் 347, 2வது நாளில் 273, 3வது நாளில் 296 ரன்கள் பேட்டிங்குக்கும், பவுலிங்குக்கும் ஒன்டே-யில் தொடர்பே இல்லை...பலன் தராத இளம் வீரர்களின் பங்களிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்நாளில் 347, 2வது நாளில் 273, 3வது நாளில் 296 ரன்கள் பேட்டிங்குக்கும், பவுலிங்குக்கும் ஒன்டேயில் தொடர்பே இல்லை...பலன் தராத இளம் வீரர்களின் பங்களிப்பு

மும்பை: மவுண்ட் மவுங்கானுயில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47. 1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்து அட்டகாசமான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை வாஷ் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘இது மிகப்பெரிய தோல்வி அல்ல.

பந்து வீச்சிலும் பீல்டிங்கில் சொதப்பி விட்டோம். இந்த தொடரில் நாங்கள் வெல்வதற்கான தகுதி எங்களிடம் இல்லை.

வாய்ப்புகளைத் தவற விட்டோம்.

 நியூசிலாந்து அணி எங்களை விட மிகவும் நுணுக்கமாக ஆடினர். தற்போது டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறோம்.

அணி நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.
இந்திய அணியில் தூண்களான தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் தவான் ஆகிய இருவருமே அணியில் இல்லை.

இதுவே அந்நிய மண்ணில் விளையாடும்போது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவுதான். அந்த இடத்தை இளம் வீரர்களான பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வாலால் நிரப்ப முடியவில்லை.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் ரன் மிஷனாக இருக்கும் கேப்டன் கோஹ்லியும் இந்தத் தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இருந்தாலும் இந்திய அணி இத்தொடரில் அதிக ரன்களை குவித்ததற்கு காரணம் கே. எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் தான்.இலக்கை எதிர்த்து அடிக்கும்போது கோஹ்லி சொற்ப ரன்களில் அவுட் ஆனதும், நிலைமையை சீர் செய்ய சீனியர்கள் யாரும் களத்தில் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. கோஹ்லி, ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரை தவிர அனைவருமே இளம் படையினராக இருக்கின்றனர்.

பேட்டிங்கில் இப்படி குறைகள் என்றால் பவுலிங்கில் அதைவிட மோசமான நிலையே இருந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட்டை கூட இந்த ஒருநாள் தொடரில் கைப்பற்றவில்லை.

யஷ்வேந்திர சாஹலை தவிர, மற்றவர்கள் யாரும் விக்கெட்டுகளை குவிக்கவில்லை. ஆனால் ரன்களை வாரிக் கொடுத்தனர்.முதல் போட்டியில் 347 ரன்கள் குவித்திருந்த இந்திய அணியால், அந்த இலக்கிற்குள் நியூசிலாந்தை தடுக்க முடியவில்லை. 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 273 ரன்களில் மடக்கிய இந்திய அணியால், அந்த ரன்களை எதிர்த்து அடிக்க முடியவில்லை.

3வது ஒருநாள் போட்டியில் 296 ரன்கள் சேர்த்த இந்திய அணியால், அதற்குள் நியூசிலாந்து அணியை சுருட்ட முடியவில்லை.

எப்படி பார்த்தாலும், இந்திய அணியின் பேட்டிங்குக்கும், பவுலிங்குக்கும் தொடர்பில்லாமலே போய்விட்டதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை