டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஆம்ஆத்மி: மோடியுடன் 250 எம்பிக்கள் முகாமிட்டும் பலனில்லை: பாஜக-வின் தேர்தல் பிரசார வியூகம் தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஆம்ஆத்மி: மோடியுடன் 250 எம்பிக்கள் முகாமிட்டும் பலனில்லை: பாஜகவின் தேர்தல் பிரசார வியூகம் தோல்வி

புதுடெல்லி: டெல்லியில் மீண்டும் ஆட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. பாஜக-வின் தேர்தல் பிரசார வியூகம் தோல்வியை சந்தித்துள்ளது.

ேமாடி முதல் 250  எம்பிக்கள் வரை முகாமிட்டு பிரசாரம் செய்தும் தேர்தல் முடிவுகளில் பலனளிக்கவில்லை. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ள ஆம்ஆத்மி கட்சி, இந்த தேர்தல் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக  இருந்தது.

யூனியன் பிரதேசமான டெல்லியின் அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும், இன்றைய தேர்தல் முடிவுகள் ஆம்ஆத்மிக்கு  சாதகமாகவே அமைந்துள்ளன. ஐந்து ஆண்டுகளாக டெல்லியை யார் நிர்வகிப்பது என்று இருந்தாலும்கூட, தேர்தல் பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளால்  கட்டவிழுத்துவிடப்பட்ட பேச்சுக்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

பாஜக-வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள கட்சியின் முழு படையையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில்  இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாத ஒன்றாக 70 சட்டசபை தொகுதிக்கும், பாஜகவின் 250 எம்பிக்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் பிரசார  அணியின் தலைவராக கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமை வகித்தார். அவர் வீடு வீடாகச் சென்று,  கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

பல்வேறு கூட்டங்களில் மாலை நேரங்களில் உரையாற்றினார். மேலும் பல பேரணிகளின் மூலம் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சியை சாடியே பேசிவந்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தேர்தல் பேரணிகளில்  உரையாற்றினார்.

இந்த தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவரும் கடைசி கட்டமாக இரண்டு பொது  கூட்டங்களில் உரையாற்றினார்.

முத்தலாக், பிரிவு 370 மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) போன்ற பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி,  தொலைநோக்கு முடிவுகள் எடுத்ததாக கூறி பிரசாரம் மேற்கொண்டனர். வழக்கம்போல், டெல்லிக்கும் ‘மோடி பிராண்ட்’ தேவைப்பட்டது.   குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜாமியா பல்கலை போராட்டம், ஷாஹீன் பாக் பகுதியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும்  நிலையில், பாஜக தலைவர்கள் அதை கொச்சைப்படுத்தி பேசினர்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், டெல்லியின் சட்டம் ஒழுங்கு மத்திய  அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்று பிரசாரம் செய்தது.

பெரும்பான்மை மக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட  பாஜக முயன்றாலும்கூட, ஆம்ஆத்மி கட்சியானது வளர்ச்சி என்ற பெயரில் பிரசாரத்தை முன்னெடுத்தது.

அதாவது, கல்வி, மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம்,  நேர்மை, நிர்வாக நோக்கம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார்.  
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 1998 மற்றும் 2013ம் ஆண்டுக்கு இடையில் டெல்லியில் ஆட்சியை நடத்திய காங்கிரஸ் கட்சி 2015 தேர்தலில் இருந்தே  பின்னடைவை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, கெஜ்ரிவாலின் அரசியல் வளர்ச்சிக்கு பின், காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில்  படுதோல்வியை சந்தித்து வந்தது. இந்த தேர்தலிலும் அதுதான் நடந்துள்ளது.

இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உடன் இணைந்து காங்கிரஸ்  போட்டியிட்டது. ஆனால், குறிப்பிடும்படியான வெற்றியை பெறவில்லை.



காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின்போது, ​​பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி சமூகத்தில் வெறுப்பை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.   வேலை இழப்பு பிரச்னை தொடர்பாக காங். ெபாதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்ெகாண்டார்.

தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த  தலைவர் அதிரஞ்சன் சவுத்திரி கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி வெற்றியின் மூலம் மதவாத பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள். காங்கிரசுக்கு தோல்வி  ஏற்பட்டுள்ளது வருத்தம் என்றாலும், பாஜக வீழ்த்தப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றார்.

இந்நிலையில், பெரும்பான்மை பலத்துடன் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் நடக்கும் தொடர்  போராட்டம், துப்பாக்கிச் சூடு, தேர்தலில் பணப்பட்டுவாடா, பிரமாண்ட பிரசாரம், தேர்தல் நடத்தை விதிமீறல், சர்ச்சை பேச்சுகள் போன்றவற்றால் பாஜக  தோல்வியை சந்தித்துள்ளது.

புதுடெல்லி தொகுதியில் முதல்வர் கெஜ்ரிவால் 64 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் ரவீந்தர சிங் நேகியை விட துணை முதல்வர் மணீஷ் சிசோடியைா 1,427 வாக்குள் பின்னடைவில் இருந்தார்.

ஆம்  ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து  சாந்தினி சோக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா பின்னடைவு பெற்றார். இதேபோன்று  பாஜவுக்கு சென்று மாடல்வுடன் தொகுதியில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.


.

மூலக்கதை