அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த பிப். 24, 25ல் டிரம்ப் இந்தியா வருகை: வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த பிப். 24, 25ல் டிரம்ப் இந்தியா வருகை: வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தும்விதமாக வருகிற 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா செல்ல உள்ளதாக, வெள்ளை மாளிகை  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட  கூட்டம் ஒன்றில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் சேர்ந்து பங்கேற்றார்.

அப்போது, டிரம்ப் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி  அழைப்பு விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அரசின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு,  டிரம்பை சந்தித்து அவரை இந்தியா வருமாறு மீண்டும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி  மெலானியா டிரம்ப்  ஆகியோர் பிப்.

24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவுக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். அமெரிக்க  அதிபரின் இந்த  பயணம், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மென்மேலும்  பலப்படுத்தும்.

இருநாட்டு மக்களுக்கிடையே இருக்கும் வலுவான மற்றும்  நீடித்த  பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமையும்’ என்று அந்த ட்விட்டர்  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜன. 16ம்  தேதியன்று, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து இருநாட்டு  அதிகாரிகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை  நடைபெற்று வருவதாக இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, தற்போது டிரம்ப் இந்தியா வருவது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் 45வது அதிபராக 2017ம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு  டிரம்ப், தனது பதவியேற்புக்கு பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.

இந்தியா வரும் டிரம்ப், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக்  ஒபாமா 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை