ஒரே நாளில் 108 பேர் பலி; இதுவரை 1,016 பேர் மரணம்: கொரோனா தீப்பொறி பெரிய நெருப்பாக மாறவாய்ப்பு...உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே நாளில் 108 பேர் பலி; இதுவரை 1,016 பேர் மரணம்: கொரோனா தீப்பொறி பெரிய நெருப்பாக மாறவாய்ப்பு...உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

பிஜீங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியான நிலையில், இதுவரை 1,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா  வைரஸ் தீப்பொறி பெரிய நெருப்பாக மாறவாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் தவிக்கும் 80 இந்தியரை  மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர்பலி நாளுக்குநாள் அதிகரித்து வரும்நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சீனாவுக்கு  வெளியே கொரோனா பரவுவதை எச்சரித்து ‘ஒரு பெரிய நெருப்பாக மாறும் தீப்பொறி’ ஆக கொரோனா இருக்கலாம் என்றும், மனித இனத்தை தொற்றுநோய்  கட்டுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. உலகளவில் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சீனாவிற்கு வெளியே, இதுவரை ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒரு மரணம் வீதம் இரண்டு மரணங்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ளது.   ஜப்பானிய துறைமுகமான யோகோகாமாவில் 3,700 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் டயமண்ட் இளவரசி கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 65  கொரோனா பாதிப்பு நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான (சிசிஎல்என்) கப்பலில் உள்ள பயணிகளில் 135 பேர்  கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி ேநர புள்ளிவிவரப்படி சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா தாக்குதலில் 2,478 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.  

இது முந்தைய நாளில் 3,062 ஆக இருந்தது.

மொத்தம் 42,638 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், பலி எண்ணிக்கை 1,016 ஆக  உயர்ந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 108 பேர் ஒரே நாளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்  முந்தைய நாளோடு ஒப்பிடும்போது புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் கூறுகையில், ‘‘சீன மக்கள் அல்லாத மக்களிடமிருந்து  கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்திய கூறுகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரசானது, ஒரு பெரிய நெருப்பாக மாறக்கூடிய தீப்பொறியாக இருக்கலாம்.

 

கொரோனா குறித்து விசாரிக்க சர்வதேச சுகாதார அமைப்பு நிபுணர்கள் முன்கூட்டியே சீனா விரைந்துள்ளனர். 2002 - 2003ல் நடந்த ‘சார்ஸ்’ இறப்பை  காட்டிலும், கொரோனா இறப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது.

உலகளவில் 168 ஆய்வகங்கள் வைரசைக் கண்டறிய சரியான தொழில்நுட்பத்தைக்  கொண்டுள்ளன. இருந்தும் இந்த நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய நோயறிதல் சோதனைகளை சரிபார்க்க தேவையான மருத்துவ வைரஸ் மாதிரிகளைக்  கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகின்றன’’ என்றார்.   சர்வதேச அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசால், சீனாவின் ெபாருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.   வைரஸ் பரவுவதை  தடுக்க வசதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான ஹூபேயில், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டு சாலைகள்  வெறிச்சோடி கிடக்கின்றன.கிட்டத்திட்ட 60 மில்லியன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை தேவைகள் புறநகரங்களில் இருந்து  பாதுகாப்பு வசதிகளுடன் வாகனங்களில் அனுப்பப்பட்டு வருகிறது.   இந்தியாவை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், சீனாவில் இந்தியர்கள் பலர் மீட்கப்படாமல் உள்ளனர்.

இதுகுறித்து,  சீனாவின் இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறுைகயில், ‘‘சுமார் 80 இந்தியர்கள் இன்னும் ஹூபேயில் இருக்கிறார்கள். இவர்கள், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள்  மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு, தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தூதரகம் இதுவரை 28,000 மின்னஞ்சல்களைப்  பெற்றுள்ளது. வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களிடமிருந்து ஒரு நாளைக்கு சுமார் 100 அழைப்புகள் வருகின்றன.   அவர்களுக்கு முறையான உதவிகளை வழங்குவதற்காக சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.

அவர்களை அங்கிருந்து  வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து, தூதரகம் அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறது’’ என்றார்.


.

மூலக்கதை