சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்த முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்த முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி,  புட்டபர்த்தி, குருவாயூர் உள்பட முக்கிய கோயில்களில் இருப்பது போல சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி சட்டத்துடன் கூடிய ஒரு புதிய  அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு தெரிவித்திருந்தது.

கேரள சட்டசபையில் இது குறித்த கேள்விக்கு தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பதிலளித்து கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயில்  திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.

சபரிமலை கோயில் தவிர 1250 கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ளன.   இதில் சபரிமலை கோயில் உள்பட ஒரு சில கோயில்களில் தான் வருமானம் கிடைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நம்பி தான் நூற்றுக்கணக்கான  தேவசம்போர்டு ஊழியர்கள் உள்ளனர்.

பல கோயில்களில் வருமானம் மிகவும் குறைவு ஆகும். எனவே சபரிமலை கோயிலை நம்பி தான் மற்ற கோயில்களில்  தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க வேறொரு அமைப்பை ஏற்படுத்தினால் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் நிலை கேள்விக்குறியாகி விடும். சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய போதிலும் தற்போது அதை ஏற்றுக்கொள்ள  முடியாது.

எனவே புதிய அமைப்பு எதையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. இவ்வருடம் மண்டல காலத்தில் கடந்த வருடத்தை விட ரூ. 84. 34 கோடி வருமானம்  அதிகமாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை