உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானுக்கு சென்றது ‘டுபாக்கூர்’ வீரர்களா?...அதிர்ச்சியில் விளையாட்டு அமைச்சகம், ஐஓஏ, ஏகேஎப்ஐ

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானுக்கு சென்றது ‘டுபாக்கூர்’ வீரர்களா?...அதிர்ச்சியில் விளையாட்டு அமைச்சகம், ஐஓஏ, ஏகேஎப்ஐ

புதுடெல்லி: பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முதல் தொடங்கியது.   முன்னதாக இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக இந்திய கபடி வீரர்கள் லாகூர் சென்றுள்ளனர். லாகூர் விடுதியில் தங்கியிருக்கும் இந்திய வீரர்களுக்கு,  அவ்விடுதி உரிமையாளர்கள் மாலை அணிவித்து வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சகமோ, நேசனல் பெடரேஷனோ அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய  விளையாட்டு துறை அமைச்சகம் கூறுகையில், ‘வெளிநாடுகளில் விளையாடச் செல்லும் வீரர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும்,  விளையாட்டுத்துறை அமைச்சகமும் அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் இந்த வீரர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர்களுக்கு இந்திய அமைச்சகம் ஏதும்  அனுமதி அளிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.



இதுகுறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா கூறுைகயில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் அரசும் இந்த விஷயத்தை  ஆராயும் என்று நினைக்கிறேன். தற்போது விளையாட சென்றவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன? இது எங்கள் அணி அல்ல; இந்திய அரசின் சார்பில்   மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்கள் யார், அவர்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது குறித்து அவர்கள் விசாரிப்பார்–்கள். இதன் பின்னணி  என்ன என்பதும் விசாரிக்கும்.

அவர்கள் எந்தவொரு சர்வதேச நிகழ்விலும் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவு அனைவருக்கும் தெரியும்.   பொதுவாக விசாவிற்கு விண்ணப்பித்தால், அதைப் பெற இரண்டு மாதங்கள் ஆகும்.

இந்த 60 பேருக்கும் இவ்வளவு விரைவாக விசா கிடைத்தது விந்தையாக  உள்ளது.  

இதுகுறித்து, மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிண் ரிஜ்ஜு கூறுைகயில், ‘‘பாகிஸ்தானில் நடைபெறும் உலக கபடி  சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க எந்த இந்திய வீரருக்கும் அனுமதி வழங்கவில்லை.

விசா வழங்குவது ஒரு நாட்டின் இறையாண்மைக்குரியது. விசா வழங்குவதில்  எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

நாட்டின் பெயரில் விளையாடுவது அல்லது இந்திய கொடியை பயன்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து, அமெச்சூர் கபடி  சங்கத்தின் நிர்வாகியும் (ஏ. கே. எப். ஐ),  ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி எஸ். பி. கார்க் கூறுகையில், ‘ஏகேஎப்ஐ  பாகிஸ்தானில்  விளையாட எந்த அணிக்கும் அனுமதி வழங்கவில்லை.

பாகிஸ்தானிற்கு  விளையாட சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.   2010  முதல் 2019ம் ஆண்டு வரை 6 முறை உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியை  இந்தியா நடத்தியுள்ளது. 6 போட்டியிலும் இந்தியா வெற்றி  பெற்றுள்ளது.

இதில்  2010, 2012, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை  தோற்கடித்து இந்தியா வெற்றியை கைப்பற்றியது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை