பைக்-அரசு பஸ் மோதி எரிந்தது தீயில் கருகி 2 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பைக்அரசு பஸ் மோதி எரிந்தது தீயில் கருகி 2 பேர் பரிதாப பலி

திருமலை: பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கும், அரசு பஸ்சும் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

ஆந்திர மாநிலம்  கடப்பாவில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதி நோக்கி வந்தது. இரவு 11 மணியளவில் கடப்பா-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் ரயில்வே கோடூரு மண்டலம் லட்சுமிகாரிப்பள்ளி அருகே வந்தபோது முன்னால் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்த 2பேர் மீது அரசு பஸ்  திடீரென மோதியது.

இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கிய பைக் சாலையில் உரசியபடி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது.

அப்போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீப்பிடித்தது.

இதில் பைக்கும், பஸ்சும் கொழுந்து விட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார்.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கினர். இந்த விபத்தில் பஸ்சும், பைக்கும் முழுவதுமாக எரிந்து கருகியது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பைக்கில் சென்ற ஒருவரும், பஸ்சில் இருந்த ஒரு பயணியும் தீயில் கருகி சடலமாக மீட்கப்பட்டனர்.   இதையடுத்து 2 பேரின் சடலங்களையும் மீட்டு கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே கோடூரு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர்கள் யார், காயமடைந்தவர்கள் யார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை