தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழிகலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..

தமிழ்நாடு, இலங்கைக்கு அடுத்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. சிங்கப்பூர் , மலேசியாவைவிட எண்ணைக்கையில் அங்குத் தமிழர்கள் அதிகம்  என்பதும் தமிழ்ப் பெயர்களும் , கலாச்சாரமும் அங்கு இன்னும் பின்பற்றப்பட்டாலும், தமிழ் மொழி பேச்சு வழக்கில் இல்லை என்பது பலரும் கவலையுடன் சொல்லிவரும் நிலையில் அதற்குத் தீர்வு ஏற்படாமல் இருந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முயற்சியில் செயல்திறன் மிக்க தமிழார்வலர், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முனைவர்.இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு தென்னாப்பிரிக்கா பயணித்து அங்கு தமிழ்மொழி வளர்ச்சி குறித்த 10 நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்திவந்திருப்பது மிகப்பெரிய தொடக்கம். 

 

தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ் வளர்ச்சித்துறையின் பேருதவியுடன் டர்பன் நகர் சென்று 90 ஆண்டுகள் பழமை கொண்ட மியர்பேங்க் தமிழ்ச்சங்கப்பள்ளியில் இலக்கிய-இலக்கண-பேச்சுத்தமிழ்-கலைப்பண்பாட்டுப் பயிலரங்கு நடத்தப்பட்டது. 

 

தமிழ்ப் பல்கலையிலிருந்து பேராசிரியர் இரா.காமராசு, மைசூர் நடுவண்மொழிகள் நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் முனைவர் சாம் மோகன்லால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன், தேனாலேயே குரலைச் செதுக்கி இசைத்தெய்வம் வழங்கியுள்ள திருப்புவனம் ஆத்மநாதன் ஐயா, காவிரிக்கரையின் நாட்டுப்புறநாயகர் கலைமாமணி இளங்கோவன், யோகப் பயிற்சியாளர் முனைவர் தங்கபாண்டியன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். 

 

தமிழ் மீது எல்லையில்லா விருப்பம் கொண்ட 200 தென்னாப்பிரிக்கத் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் 10 நாட்கள் டர்பனில்  நடைபெற்ற இந்தப் பயிற்சி தென்னாப்பிரிக்க -தமிழ்நாட்டு மொழி, கலை , கலாச்சாரம் சார்ந்த உறவின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது

மூலக்கதை