கவுஹாத்தியில் இன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூர் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவுஹாத்தியில் இன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட்ஜாம்ஷெட்பூர் மோதல்

கவுஹாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கவுஹாத்தியில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் வலுவான ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து  நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி மோதவுள்ளது. 10 அணிகள் பங்கேற்று ஆடி வரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.

நேற்று சென்னை  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. தற்காப்பு ஆட்டத்தை  மேற்கொண்டதால், இப்போட்டியில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.

இதனால் இப்போட்டி டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில்  தற்போது பெங்களூரு அணி 3ம் இடத்திலும், சென்னை அணி 5ம் இடத்திலும் நீடிக்கிறது.நேற்றைய போட்டியில் வென்றிருந்தால், சென்னை  அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று பிரகாசமாக இருந்திருக்கும். அரையிறுதிக்கு தகுதி பெற இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றேயாக  வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

இந்நிலையில் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து இன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி களம் இறங்குகிறது.   நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி தற்போது பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலுமே  தோல்வியடைந்துள்ளது.

 இதுவரை 14 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி, அவற்றில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன்  பரிதாபமான நிலையில் உள்ளது.

‘தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிக்காக போராடுவோம்’ என்று  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது  என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

.

மூலக்கதை