அடில் ரஷித், ஜோ டென்லே பொறுப்பான ஆட்டம்: ஜோகனஸ்பர்கில் இங்கிலாந்து வெற்றி...சமனில் முடிந்தது ஒருநாள் தொடர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடில் ரஷித், ஜோ டென்லே பொறுப்பான ஆட்டம்: ஜோகனஸ்பர்கில் இங்கிலாந்து வெற்றி...சமனில் முடிந்தது ஒருநாள் தொடர்

ஜோகனஸ்பர்க்: அடில் ரஷித்தின் பொறுப்பான பந்துவீச்சு மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ டென்லேவின் நிதானமான ஆட்டத்தினால் 3வது  ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. முன்னதாக டர்பனில் நடைபெற  இருந்த 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானதால், 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

ஜோகனஸ்பர்கில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில்  7 விக்கெட் இழப்பிற்கு 256  ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் தலா 69 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து தரப்பில்  அடில் ரஷித், 51 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக இவரே தேர்வு செய்யப்பட்டார்.   257 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணியின் வீரர்களும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்த வண்ணம் இருந்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில்  இறங்கிய ஜோ டென்லே, பொறுப்பாக ஆடி 66 ரன்களை குவித்தார். இதையடுத்து 43. 2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 257 ரன்களை எடுத்து,  இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டவுனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டர்பனில் நடைபெற இருந்த 2வது  போட்டி மழையால் ரத்தானது. ஜோகனஸ்பர்கில் நடந்த இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவே, இத்தொடர்  1-1 என சமனில் முடிந்துள்ளது.

இத்தொடரின் தொடர் நாயகனாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் குவின்டன் டி காக் (2 போட்டிகளில் 176  ரன்கள்) தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, வரும் 12ம் தேதி ஈஸ்ட் லண்டனில் நடைபெற உள்ளது.

.

மூலக்கதை