கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்து வருவதால் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் திருச்சி  அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவரது அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

இதனால்  நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற  தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது. இதேபோன்று 34,598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவர் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். இதேபோன்று உகான்  நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என  முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ்  வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 3. 45 லட்சம் பேருக்கு நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும், 1. 89 லட்சம் பேர் மருத்துவ  பரிசோதனையில் இருப்பதாகவும் சீனா தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

திருச்சி வந்த  வாலிபருக்கு கொரோனா

சீனாவைத் தவிர பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.

ஜப்பானில் 89 பேருக்கும், சிங்கப்பூரில் 33 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது  உறுதியாகி உள்ளது. சிங்கப்பூரிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடுகளில் முடங்குவதால், பல கடைகள் பொருட்களின்றி காலியாக கிடக்கின்றன.

இந்தியாவில்  கேரளாவில் வைரஸ் தொற்று தாக்கி 3 பேருக்கு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், வுகானில் இருந்து திரும்பிய 647 இந்தியர்கள் மனேசர் மருத்துவமனையில் 14 நாள்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த திருச்சி குழுமணி மருதாண்டாக்குறிச்சியை சேர்ந்த வீரமணி மகன்  ராமமூர்த்தி (30) என்பவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

.

மூலக்கதை