கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு...34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு...34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

பீஜிங்: சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கி இதுவரை 722 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சீனாவில் கொரோனா எனப்படும் வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவியது.

இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 86 பேர் பலியாகி உள்ளனர். இதன்படி  வைரஸ் தாக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது.

34 ஆயிரத்து 500 பேர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த ‘டயமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பலில் இருந்த ஒருவருக்கும், வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரத்து 500 பயணிகளும், 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். இந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி. மீ தொலைவிலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த கப்பலில் மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இந்த கப்பலில் 6 இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி அளிக்க தயார்: அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது டுவிட்  பதிவில்,’சீனாவுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவுக்கு எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார்’ என்று தெரிவித்துள்ளார்.சீனாவில் 80 இந்திய மாணவர்கள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் இந்திய மாணவர்கள் 80 பேர் தங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அமைச்சர்,  80 மாணவர்களில் 10 பேர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், காய்ச்சல் இருந்ததால் அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.


.

மூலக்கதை