சீனாவில் ‘கொரோனா’ பலி 563 ஆக அதிகரிப்பு: கப்பல் பயணிகள் 5,400 பேர் நடுக்கடலில் ‘சிறை’ வைப்பு...14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க ஜப்பான் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் ‘கொரோனா’ பலி 563 ஆக அதிகரிப்பு: கப்பல் பயணிகள் 5,400 பேர் நடுக்கடலில் ‘சிறை’ வைப்பு...14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க ஜப்பான் உத்தரவு

டோக்கியோ: சீனாவில் கொரோனா வைரஸ் பலி 563 ஆக அதிகரித்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பீதியால் 5,400 கப்பல் பயணிகள் நடுக்கடலில் தவித்து வருகின்றனர்.   மிதக்கும் சிறையாக ‘டயமண்ட் இளவரசி’ கப்பல் மாறியுள்ளது. இந்த கப்பலை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


கொரோனா வைரஸ் வேகமாக உலகளவில் பரவி வரும் நிலையில், சீன அரசாங்கம் கடந்த 24 மணி நேர சுகாதார பாதிப்பு குறித்த அறிக்கையில், வைரஸ்  பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 73 பேர் பலியான நிலையில், தற்போதைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 இதற்கிடையே ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த சுற்றுலா கப்பலில் இருந்த 5,400 பயணிகளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டது.


அதனால், டோக்கியோவிற்கு வெளியே உள்ள துறைமுக நகரமான யோகோகாமாவில் இரண்டு பயணக் கப்பல்களையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.   இந்த கப்பல்கள், 2 வாரகாலம் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு பின்னரே, துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள ஆஸ்திரேலிய பயணி ஒலிவியா கபோடிகாசா கூறுகையில், ‘டயமண்ட் இளவரசி பயணக் கப்பல் கொரோனா வைரஸ் பரவலால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட சோதனையில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். இப்போது, 20 ஆக உயர்ந்துள்ளது.



விரைவில் கப்பலில்  இருந்து எங்களை அழைத்து செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, 273 பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

120 பேர்  காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மிதக்கும் சிறை போன்று, கொரோனா பாதிப்பால் 2 கப்பல்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கப்பலில்  இருந்து மேலும், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பயணிகள் தங்கள் அறைகளை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

இங்கு  நடப்பதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இப்போதைக்கு வீட்டிற்கு செல்லமாட்டேன்  என்றே தோன்றுகிறது’ என்றார்.



இதுகுறித்து ஜப்பானின் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ கூறுகையில், ‘‘இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 273 பேரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் பரிசோதனை முடிவு இன்னும் வந்து சேரவில்லை.

டைமண்ட் இளவரசி கப்பலில் இருந்து  ஹாங்காங்கில் இறங்கிய 80 வயது சீன பயணி ஒருவர் மூலம் வைரஸ் பரவி உள்ளது’’ என்றார். இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில், உலக சுகாதார  நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிக பாதிப்புகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,018 ஆக உள்ளது.

சீனாவை தவிர்த்து, ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்காக உலக நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும்’’ என்றார்.

ஐ. நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறுகையில், “இக்கட்டான இந்த நேரத்தில் சர்வதேச ஒற்றுமை அவசியம்.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள  சீனா மற்றும் பிற நாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அப்பாவி மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது’’ என்றார்.

.

மூலக்கதை