சீனாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூரில் தீவிரம்: 500-ஐ நெருங்குகிறது கொரோனா பலி...20 நாடுகளில் வைரஸ் தொற்று உறுதியானதால் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூரில் தீவிரம்: 500ஐ நெருங்குகிறது கொரோனா பலி...20 நாடுகளில் வைரஸ் தொற்று உறுதியானதால் பீதி

பீஜிங்: சீனாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ெகாரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 500-ஐ  நெருங்கிவிட்டது.

20 நாடுகளில் வைரஸ் தொற்று உறுதியானதால், உலக சுகாதார நிறுவனம் அவசரநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 490 ஆக உயர்ந்தது.

கடுமையான பாதிப்புக்குள்ளான ஹூபே  மாகாணத்தில் மேலும் 65 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பரப்பில், புதிதாக 3,887 பேருக்கு நோய்த்தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது.

மொத்தமாக 24,324 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் நோய் பரவியிருப்பது சோதனைகள் மூலம் உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், சீன அரசாங்கம் எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கை ஏற்புடையதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் இந்த நேரத்தில்  வைரசை எதிர்த்துப் போராடுவதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘சில பணக்கார நாடுகள், தங்களது தரப்பு பாதிப்பு தரவுகளை  பகிர்வதில் அலட்சியம் காட்டுகின்றன.

சீனாவிற்கு வெளியே இதுவரை 176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் உலக  சுகாதார நிறுவனத்துக்கு குறைவான அறிக்கைகளே வந்துள்ளன.

கிட்டத்தட்ட 38 சதவீதத்திற்கு மட்டுமே விவரங்கள் பெறப்பட்டுள்ளது. கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 2. 1% ஆக இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் அல்லது அடிப்படையில் உடல்நலப்  பிரச்னைகள் உள்ளவர்களாக இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுக்கு முன் பரவிய ‘சார்ஸ்’ நோய் தொற்று கிட்டத்தட்ட 10% நோயாளிகளைக் கொன்றது’  என்றார்.
உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் சீனாவில் 24,325 பேரும் (உலகளவில் 24,551 பேர்) மற்றும் இறப்பு எண்ணிக்கை 490 (492) என்ற  அடிப்படையில் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் உள்ளது.

அதன்படி ஜப்பான் (46); தாய்லாந்து (31); சிங்கப்பூர்  (30); ஹாங்காங் (19); தென் கொரியா (17); ஆஸ்திரேலியா (14); ஜெர்மனி, தைவான், வியட்நாம், மலேசியா மற்றும் மக்காவோ (தலா 12); அமெரிக்கா (11);  பிரான்ஸ் மற்றும் கனடா (6); ஐக்கிய அரபு அமீரகம் (5); இந்தியா (3); பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, இத்தாலி மற்றும் பெல்ஜியம் (தலா 2); மற்றும்  சுவீடன், பின்லாந்து, கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் ஸ்பெயின் (தலா 1) என்ற அடிப்படையில் உள்ளன.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அவசரநிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது: அவசர காலங்களில், மக்கள் அனைவரும் பீதியில் இருக்கும்போது, அவர்களை தவறாக வழிநடத்தக் கூடாது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் கொரோனா வைரசைத்  தடுக்கவோ சிகிச்சையளிக்கவோ முடியாது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரஸ்களுக்கு எதிராக செயல்படாது. இருப்பினும், ஒரு நோயாளி கொரோனா வைரசுக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்த நபர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெறலாம்.

வைரசை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்து  இப்போது வரை எதுவும் இல்லை. சில குறிப்பிட்ட சிகிச்சைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும் அவை மருத்துவ ரீதியாக சோதிக்கப்படும். ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்.

ஆஸ்துமா, நீரிழிவு நோய் அல்லது இதய நோய் போன்ற  ஏதேனும் முன்பே இருக்கும் மக்கள், அதிகபட்சமாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகளுக்கு வைரஸ்  தொற்று ஏற்படலாம் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

செல்லப்பிராணிகளை தொட்டால் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.   செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் எளிதில் கடந்து செல்லக்கூடிய சால்மோனெல்லா போன்ற பொதுவான பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாப்பாக  இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர் கண்காணிப்பு

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக பேரிடர் அறிவிப்புக்கு பின், கேரளாவில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கேரளாவில் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ள 2,421 பேரில், 2,321 பேர் வீடு  திரும்பியதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, 190 ரத்த மாதிரிகள் சோதனைகளுக்காக  அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில் 118 கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

 வைரஸ்  பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட மூன்று பேரை பொறுத்தமட்டில், அவர்கள் ஆலப்புழா, திரிச்சூர், காசர்கோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 647 பேரும் 2 ராணுவ மருத்துவ முகாம்களில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.   அவர்களில் ஐந்து பேருக்கு வைரஸ் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் ெதாடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் கல்யாணம்

சீனாவில் தவித்து வரும் இந்தியர்களை 2 விமானம் மூலம் மத்திய அரசு 647 பேரை டெல்லி அழைத்து வந்தது. எனினும், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக  10 இந்தியர்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்படவில்லை.

அவர்களில், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம் ஜோதி என்பவரும் ஒருவர். தமக்கு  அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக தாய்நாடு திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம்  கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் ‘தற்போது காய்ச்சல் குறைந்திருப்பதால் உடனடியாக மீட்டுச் செல்ல வேண்டும்.   அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மீட்டு செல்ல கேட்டுக் கொள்கிறேன்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அவரது குடும்பத்தினரும்  அன்னம் ஜோதியை மீட்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை