உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை மீறி முதல் அறிவிப்பு: சீனர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நுழைய தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை மீறி முதல் அறிவிப்பு: சீனர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நுழைய தடை

ஒரே நாளில் 58 பேர் பலி; இதுவரை 362 பேர் மரணம்
10 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறப்பு


பீஜிங்: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலையும் மீறி, சீனர்கள் மற்றும் அந்நாட்டில் இருந்து வரும் வெளிநாட்டினர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 58 பேர் பலியான நிலையில், இதுவரை 362 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த 10 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டது.   கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மொத்தம் 362 பேர் பலியான நிலையில், 2,829 பேர் புதியதாக வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 58 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 362 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நோய் ெதாற்று பாதிப்பில், 17,205 சீனர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சர்வதேச நாடுகள் சீனாவிற்கான பயண கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் சந்தேகத்திற்கு இடமான ரத்த மாதிரிகள் சிலரிடம் சோதனைக்கு எடுக்கப்பட்டும், அதன் முடிவுகள் வராத நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் சீனர் ஒருவர் வைரஸ் பாதிப்பால் பலியான நிலையில், சீனாவில் இருந்து வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாாக இருந்தாலும் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கள் நுழைவதற்கு தடை விதித்து அந்நாடு முதன்முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேசியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை மீறி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்துள்ளன.கொரோனா வைரசால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள சீனா, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனியாக மருத்துவமனையை கடந்த சில நாட்களுக்கு முன் கட்டத் தொடங்கியது. அதாவது, புதிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீனாவின் வூஹானில் கடந்த 10 நாட்களுக்குள் கட்டி முடித்தது.

அங்கு இப்போது மருத்துவ பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தீவிரமாக அனுப்பி வருகிறது. ெதாடர்ந்து 1,500 படுக்கைகள் கொண்ட இரண்டாவது மருத்துவமனையை கட்டும் பணியை அந்நாடு தொடங்கியுள்ளது.

புதிய மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 1,400 பேர் கொண்ட ராணுவ
மருத்துவ குழுக்கள் தொடர்ந்து வுஹானுக்கு வந்தன.

சீனாவில் சந்திர புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து நிதிச் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சீனாவின் ஷாங்காய் கலப்பு குறியீடு 8. 7% அளவில் சரிந்தது.

கடலோர ஜெஜியாங் மாகாணத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வென்ஜோவின் வர்த்தக மற்றும் உற்பத்தி மையத்திற்கு, தலா ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே ஒவ்வொரு நாளும் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

7 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹுவாங்காங் பகுதியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.இந்தியாவில் ‘இ-விசா’ தடை

கொரோனா வைரஸ் 25 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், சீனாவில் வசிக்கும் சீனப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினருக்கான இ-விசா வசதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது. இது, சீன பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் மக்கள் சீனக் குடியரசில் வசிக்கும் பிற தேசங்களின் விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசாக்களை வைத்திருப்பவர்களுக்கும், இனி செல்லுபடியாகாது. இந்தியாவுக்கு வருகை தரும் சீனர்கள், அதறக்கான கட்டாய காரணத்தை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகி தடையில்லா சான்றை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் கட்டாய தனிமை

பல நாடுகள் சீன நாட்டினருக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, சீனாவிலிருந்து வருபவர்களுக்கு பயணத் தடையையும் விதித்துள்ளன.

சீனாவிலிருந்து வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அவர்களின் நாட்டை பொருட்படுத்தாமல் 14 நாள் பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஹியூப் மாகாணத்திலிருந்து வரும் அமெரிக்க குடிமக்கள், 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சீன பயணிகளுக்கு அனைத்து வகையான விசாக்களையும் வழங்குவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது.

வியட்நாம் சுற்றுலா விசாக்களை நிறுத்தியுள்ளது.

சீன நாட்டினருக்கான விசா இல்லாத சுற்றுலாவை நிறுத்துவதாகவும், அவர்களுக்கு வேலை விசாக்கள் வழங்குவதை நிறுத்துவதாகவும் ரஷ்யா அறிவித்தது. இது ஏற்கனவே சீன நாட்டினருக்கு மின்னணு விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டது.

இதேபோன்ற விசா கட்டுப்பாடுகள் பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் ஆகிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ளன.

இறுதிச் சடங்கில் கெடுபிடி

கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் இறுதிச் சடங்குகள், அடக்கம் மற்றும் பிரியாவிடை விழாக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சடலங்களை, பெரும்பாலும் அவர்கள் இறந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் தகனம் செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் இருந்து வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது.   பிற வழிகளில் பாதுகாக்க கூடாது. உடனடியாக தகனம் செய்ய வேண்டும்.

உடல்களில் கிருமி நீக்கம் செய்து மருத்துவத் தொழிலாளர்களால் ‘சீல்’ வைக்கப்பட்ட பையில் சடலத்தை வைக்க வேண்டும். அதன் பின்னர் திறக்க முடியாது.

இறுதி ஊர்வலங்கள் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். இதற்கான சிறப்பு வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை