மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு

பரூகாபாத்: தனது மகளின் பிறந்த நாளை கொண்டாட 23 குழந்தைகளை அழைத்து சென்ற கொலைக் குற்றவாளி, அவர்களை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்தான். அதையடுத்து, அவனை நேற்றிரவு என்எஸ்ஜி கமாண்டோ அதிரடிபடை போலீசார் சுட்டுக் கொன்று, 23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவம் வடமாநிலங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் பரூகாபாத் அடுத்த கசரியா கிராமத்தில், 6 மாதம் முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் குற்றவாளி ஒருவனால் சிறைவைக்கப்பட்டிருப்பதாக கான்பூர் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு துப்பாக்கி ஏந்திய சிறப்பு காவல்படையுடன் விரைந்தனர்.

பிணைக்கைதிகளாக 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த அவன், போலீசார் வருவதை கண்டு பக்கத்து வீட்டார் மூலம் அந்த வீட்டின் பால்கனி வழியாக 6 மாத சிறுமி ஒருவரை விடுவித்தான்.

மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 200 கி. மீ தூரத்தில் உள்ள பரூகாபாத்தில் நடக்கும் நிலைமையை முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வர் அலுவலகத்தில் இருந்து தீவிரமாக கண்காணித்தார். உத்தரபிரதேசம் முழுவதும் குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த செய்தி வேகமாக பரவியது.

இதற்கிடையே, குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த அவன், திடீரென வீட்டின் மொட்டை மாடியில் இருந்து துப்பாக்கியால் சுட்டான். அதிர்ச்சியடைந்த அதிரடிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்திருந்தவனின் உள்நோக்கம் உடனடியாக அறியப்படவில்லை.

அவன், தனது கோரிக்கைகளை அரசாங்கத்துடனோ அல்லது அதிகாரிகளுடனோ பகிர்ந்து கொள்ள விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ளுமாறு டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்து வேண்டுகோள் விடுத்தன. நிலைமை பதட்டத்துடன் மோசமாகிக் கொண்டிருந்ததால் என்எஸ்ஜி (தேசிய பாதுகாப்பு படை) கமாண்டோக்களின் குழு பரூகாபாத்தை அடைய டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக டெல்லியின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர், ‘நாங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்பதை உறுதி செய்வோம்; தேவைப்பட்டால், என்எஸ்ஜி-யும் இந்த நடவடிக்கைக்கு அழைக்கப்படும். அதன்படியே கமாண்டோ குழு கிராமத்தை அடையுமாறு பணிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கிடையே, போலீசார் சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் பேச முயன்றனர்.

அவன், உள்ளூர் எம்எல்ஏ-வுடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளான். உடனடியாக அந்த எம்எல்ஏ, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

ஆனால், அந்த நபர் எம்எல்ஏவுடன் பேசவிரும்பவில்லை. நேரம் ஆக ஆக போலீசாருக்கு பதட்டம் அதிகரித்தது.

அதையடுத்து, அதிரடிபடை நேரடி நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டது. அதனை ெதாடர்ந்து, வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த துப்பாக்கி ஏந்திய என்எஸ்ஜி மற்றும் உள்ளூர் அதிரடிபடை போலீசார், அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

பின்னர், அங்கு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், ‘‘துப்பாக்கி ஏந்திய அவன், குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்தான்.

நேற்றிரவு அவன் போலீசாரால் கொல்லப்பட்டான். கிட்டத்தட்ட
8 மணி நேரத்திற்கு பின் 23 குழந்தைகள் மீட்கப்பட்டனர்’’ என்றார்.

இதுகுறித்து, கான்பூர் சரக டிஐஜி மோஹித் அகர்வால் கூறியதாவது: சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 6 முதல் 15 வயதுடைய 23 சிறுவர், சிறுமிகளை தனது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நேற்று மதியம் அழைத்து சென்றுள்ளான்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகளை அவன் விடுவிக்கவில்லை. நேரம் அதிகமாக அதிகமாக குழந்தைகளின் ெபற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

மாலை 5. 45 மணிக்குதான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீட்டின் அடித்தளத்தில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்தான்.

அவனது ெபயர் சுபாஷ் பாதம். கொலைக் குற்றவாளியான அவன், ஜாமீனில் உள்ளான்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின், அவன் கட்டிடத்தின் மேல் இருந்து ஆறு முறை துப்பாக்கியால் சுட்டான்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர். தன்னுடன் பேச முயன்றவர்கள் மீது சுபாஷ் பாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

அவ்வாறு துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. சுபாஷ் பாதம் உள்ளூர் எம்எல்ஏ-வுடன் பேச விரும்பினான்.

ஆனால் அவர் அங்கு வந்தபோது அவரிடம் பேச மறுத்துவிட்டான். அவன் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான், குழந்தைகளை அதிக நேரம் எதற்காக அடைத்து வைத்திருந்தான் என்பது தெரியவில்லை.

தொடர் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி அடித்துக் கொலை

உத்தரபிரதேசத்தில் 23 குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்த சுபாஷ், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேற்கண்ட குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுபாஷின் மனைவியை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அடித்து தாக்கினர். அதில் படுகாயமடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை, ஆபத்தான நிலையில் இருந்த சுபாஷின் மனைவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். சுபாஷின் மனைவி வியாழக்கிழமை இரவு தப்பிக்க முயன்றபோது உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டார்.

பின்னர், அதேபகுதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் இறந்துவிட்டதால், சந்தேக மரணமாக வழக்குபதிந்து விசாரிக்கப்படுவதாக  கான்பூர் போலீஸ் அதிகாரி மோஹித் அகர்வால் தெரிவித்தார். இதற்கிடையில், மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட உத்தரபிரதேச போலீஸ் குழுவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அனைத்து போலீசாருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் கே. அவஸ்தி தெரிவித்தார்.

.

மூலக்கதை