சிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல்: கடைசி நேரத்தில் ஒரு குழு வாபஸ்

தினகரன்  தினகரன்
சிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல்: கடைசி நேரத்தில் ஒரு குழு வாபஸ்

பிரசல்ஸ்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு கொண்டு வந்துள்ள தீர்மானங்கள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம்  கடந்த மாதம் கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமை ஆணையர், ‘‘இந்த சட்டம் அடிப்படையிலேயே பாகுபாடுடன் கூடியது’’ என கூறியிருந்தார். இதை வைத்து இந்த திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உள்ள எஸ் அண்டி டி (சமதர்மவாதிகள் மற்றும் ஜனநாயக கட்சியினர் கூட்டணி), ஐரோப்பிய மக்கள் கட்சி (பிபிஇ), ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தக் குழு (இசிஆர்), ஐரோப்பிய ஐக்கிய இடதுசாரி, ஐரோப்பிய புதுப்பிப்பு குழு, கிரீன்ஸ் மற்றும் ஐரோப்பிய குழு ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. அதில், ‘மதரீதியிலான துன்துபுறுத்தல்களுக்கு ஆளானவர்களை பாதுகாக்கும் இலக்கு வரவேற்கத்தக்கது என்றாலும், அகதிகள் கொள்கை, தேவைப்படும் அனைவருக்கும் பொருந்த வேண்டும். ஆனால் இந்த சட்டம் பாகுபாடுடனும், அபாயகரமான பிரிவினையை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது,’ என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த திங்கள் கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘ஒரு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டம் குறித்து, இன்னொரு நாடாளுமன்றம் தீர்ப்பளிப்பது பொருத்தமற்றது. இந்த நடைமுறை சுயநலவாதிகளால் தவறாக பயன்படுத்தப்படும். ஜனநாயக நாடுகளில், ஒரு நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள், மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தின் இறையாண்மை முறையை மதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்த 6 குழுக்களில், ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தக் குழு (இசிஆர்) என்ற குழு தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுள்ளது. காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து, இறுதி தீர்மானத்தில் இடம் பெறவில்லை. இந்த தீர்மானம் குறித்து பெல்ஜியம் நாட்டின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டால், அது மத்திய அரசுக்கும், இந்திய நாடளுமன்றத்துக்கும், ஐரோப்பிய ஆணையத்துக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். இதில், ஐரோப்பிய ஆணையம் பொருளாதார தடை விதிக்கும் அதிகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை