கருக்கலைப்பு கால வரம்பு 24 வாரங்களாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
கருக்கலைப்பு கால வரம்பு 24 வாரங்களாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான கால அளவை 24 வாரங்களாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் கருக்கலைப்பு செய்வதற்கான கால நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டன. குறிப்பாக கர்ப்பகால மருத்துவ முடிவு சட்டம் 1971ல் திருத்தம் செய்யப்பட்டு கர்ப்பகால மருத்துவ முடிவு திருத்தம் மசோதா 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கருக்கலைப்பு செய்வதற்கான காலஅளவு தற்போதுள்ள 20 வாரம் என்பதில் இருந்து 24 வாரங்களாக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பான கருத்தரித்தலை மேற்கொள்ளவும், பெண்களின் உடல்கள் மீதான சந்ததி உற்பத்தி உரிமையை பாதுகாப்பதுமே இதன் நோக்கம். கருக்கலைப்பு செய்வதற்கான கால அளவை உயர்த்தியுள்ளது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட, உடல் ஊனமுற்ற பெண்கள், மற்றும் தாங்கள் கர்ப்பம் அடைந்துள்ளோம் என்பதை அந்தகால கட்டம் வரை உணராத சிறுமிகளுக்கு உதவுவதாக இருக்கும். கர்ப்பம் அடைந்துள்ளதை 5 மாதம் வரை அறியாத பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றம் செல்வதற்கும் இது உதவியாக இருக்கும். இதுதவிர பிரசவ கால இறப்பையும் குறைக்க இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், ‘புது திட்டங்களை செயல்படுத்துவதற்காக வடகிழக்கு கவுன்சிலுக்கு 30 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிக பலன் அடைவார்கள்,’ எனவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மூலக்கதை