கருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 24 வாரங்களாக நீட்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

தினகரன்  தினகரன்
கருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 24 வாரங்களாக நீட்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

புதுடெல்லி: கருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 20லிருந்து 24 வாரங்களாக நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கொரோனா வைரஸ் தாக்கம், கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், சில சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 1971ம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டப்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க முடியும். ஆனால், புதிய திருத்தத்தின்படி, தாய் அல்லது கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெண்களுக்கு அவர்களது உடல் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சீர்திருத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளர். இந்த சட்டத்திருத்தமானது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோருக்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒப்புதல் பெறப்படும் என வழக்கு ஒன்றின் விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை