சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பொருத்தமற்ற செயல்: ஓம் பிர்லா கண்டனம்

தினகரன்  தினகரன்
சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பொருத்தமற்ற செயல்: ஓம் பிர்லா கண்டனம்

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது பொருத்தமற்ற செயல் என மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற சபாநாயகர் டேவிட் மரியா சசோலிக்குக்கு அவர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்தை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி தவிப்பவர்கள் எளிதில் குடியுரிமை பெற வேண்டும். சிறுபான்மையினருக்கு எளிதில் குடியுரிமை அளிக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது யாருடைய குடியுரிமையையும்  பறிக்காது என்றும், இதனை ஐரோப்பிய நாடாளுமன்றம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பிற நாடுகளின் நாடாளுமன்றம் நடந்துக்கொள்ள கூடாது என்றும், இது ஜனநாயகத்துக்கு அழகு அல்ல என்றும்  ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். எனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதே இருதரப்புக்கும் ஆரோக்கியமான உறவு நீடிக்க வழிவகுக்கும் என்றும்  ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தியாவின் இறையாண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் எட்டி தலையிடலாம் என அவர் கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை