பதவி உயர்வு! புதுச்சேரி அதிகாரிகள் 6 பேருக்கு... மத்திய அரசின் உத்தரவால் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
பதவி உயர்வு! புதுச்சேரி அதிகாரிகள் 6 பேருக்கு... மத்திய அரசின் உத்தரவால் மகிழ்ச்சி

புதுச்சேரி : சீனியர் பி.சி.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

பி.சி.எஸ்., அதிகாரிகள் என்று அழைக்கப்படும் புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அரசின் பல்வேறு துறைகளில் 59 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், 'தற்போதைய பணி பொறுப்பு' என்ற அடிப்படையில் 15 அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். பி.சி.எஸ்., அதிகாரிகளாக பல ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு, அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவிகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, 'அக்மு' (அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் யூனியன் டெரிடெரி) என்று அழைக்கப்படும் யூனியன் பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பொதுவான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும்.

இந்நிலையில், பணியாளர் தேர்வாணைய (யூ.பி.எஸ்.சி.,) அலுவலகத்தில் பதவி உயர்வு கமிட்டி, கடந்த டிசம்பர் 12ம் தேதியன்று டில்லியில் கூடியது. இந்த கூட்டத்தில், சீனியர் பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இதன்படி, கவர்னரின் கூடுதல் செயலர் சுந்தரேசன், டில்லியில் உள்ள புதுச்சேரி அரசு விருந்தினர் விடுதியில் உதவி உள்ளிருப்பு ஆணையராக பணியாற்றும் ஜெயந்தகுமார் ரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரவிப்பிரகாஷ், கூட்டுறவு பதிவாளர் ஸ்மித்தா, பேரிடர் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா, தொழிலாளர் ஆணையர் வல்லவன் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது.

பதவி உயர்வு கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், 6 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கும் வகையில், ஐ.ஏ.எஸ்., தேர்வு பட்டியல் குறித்த அறிவிப்பை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு எந்த ஆண்டின் சீனியாரிட்டியை வழங்குவது என, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு வெளியிடும்.

பி.சி.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற போதும், அரசு செயலர் என்ற அந்தஸ்தில் 6 பேரும் புதுச்சேரியிலேயே தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிகிறது. கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்ற பலர் புதுச்சேரியிலேயே பணியாற்றிய மரபு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மன வருத்தத்துக்கு மருந்து!
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள 6 பேரும், புதுச்சேரி அரசில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். சீனியர்களாக இருந்தபோதும், ஐ.ஏ.எஸ்.,க்கு முந்தைய நிலை பதவி உயர்வான சிறப்பு செயலர் பதவி உயர்வு இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மன வருத்தத்தில் இருந்தனர்.மேலும், பழுத்த அனுபவம் வாய்ந்த அதிகாரிகளாக இருந்தபோதும், ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கீழ் பணியாற்ற வேண்டிய சூழலும் இருந்தது. இவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வில் 2011ம் ஆண்டின் சீனியாரிட்டி தரப்படும் என தெரிகிறது. இதனால், சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக உருவெடுக்க உள்ளனர்.

பி.சி.எஸ்., அதிகாரிகள் குஷி!
சீனியர் பி.சி.எஸ்., அதிகாரிகள் பிரிவில்( நான் பங்ஷனல் கிரேடு) தற்போது 14 பேர் உள்ளனர். இதில் 6 பேருக்கு ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு தற்போது கிடைத்துள்ளது.இதன் எதிரொலியாக, சங்கிலி தொடராக அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால், பி.சி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

மூலக்கதை