தேறுமா? தூய்மை நகரங்கள் பட்டியலில் தூங்கா நகரம் ... ஜன.,31 வரை மக்கள் ஓட்டுப்பதிவு செய்யலாம்

தினமலர்  தினமலர்
தேறுமா? தூய்மை நகரங்கள் பட்டியலில் தூங்கா நகரம் ... ஜன.,31 வரை மக்கள் ஓட்டுப்பதிவு செய்யலாம்

மதுரை : இந்திய அளவில் துாய்மை நகரங்கள் பட்டியலில் கடந்தாண்டு 201வது இடத்திற்கு தள்ளப்பட்ட துாங்கா நகரமான மதுரை இம்முறை தேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'ஸ்வச் பாரத் மிஷன்' சார்பில் ஆண்டுதோறும் துாய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த முறை மதுரை மாநகராட்சிக்கு 201வது இடம் கிடைத்தது. இம்முறை மக்கள் தொகை அடிப்படையில் பல பிரிவுகளாக போட்டி நடக்கிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் மதுரை போட்டியிடுகிறது. இதில் முன்னேற்றம் காண மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.சுகாதாரப்பணிகளை ஆவணப்படுத்துதல், திறந்தவெளி கழிப்பிடம், குப்பை இல்லா நகரச் சான்று, மக்கள் கருத்து, மத்திய அரசின் ரகசிய ஆய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் 6 ஆயிரம் மதிப்பெண்களுக்கு போட்டி நடக்கிறது.

தற்போது நகர மக்கள் ஓட்டளிக்க ஜன.31 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவான ஓட்டுகள் அடிப்படையில் தமிழகத்தில் மதுரை 2வது இடத்தில் உள்ளது. நகரில் 63 ஆயிரம் பேர் ஓட்டளித்துள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மதுரையுடன் 48 நகரங்கள் போட்டியிடுகின்றன. இம்மாதம் இறுதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட மதுரை துாய்மையடைந்துள்ளதால், தமிழகத்தில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பிப்., 2வது வாரம் முடிவு தெரிந்துவிடும். நகர மக்கள் ஓட்டளிக்க வேண்டும்' என்றனர்.

ஓட்டளிப்பது எப்படி



அலைபேசியில் பிளே ஸ்டோர் மூலம் 'ss2020 VoteForYourCity' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அலைபேசி எண், முகவரி, மொழியை தேர்வு செய்ய வேண்டும். மதுரையின் துாய்மை குறித்து கேட்கப்படும் 7 கேள்விகளுக்கு தங்கள் பதில் மூலம் மதிப்பெண் வழங்க வேண்டும். துாய்மை நகரங்கள் தேர்வில் இம்மதிப்பெண்கள் முக்கிய இடம் வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை