திருச்சி பா.ஜ., பிரமுகர் வெட்டிக் கொலை; தப்பிய வாலிபருக்கு போலீசார் வலை

தினமலர்  தினமலர்
திருச்சி பா.ஜ., பிரமுகர் வெட்டிக் கொலை; தப்பிய வாலிபருக்கு போலீசார் வலை

திருச்சி: மகளுக்கு, 'லவ் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பா.ஜ.,வினர், அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு, 39. பா.ஜ.,வின் பாலக்கரை மண்டல செயலரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், 'டூ - வீலர்'களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, 'மார்க்கெட்'டில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணியில், விஜயரகு ஈடுபட்டிருந்த போது, உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, அங்கு வந்தார்.

விஜயரகுவுடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது பாபு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயரகுவை கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி, தப்பி ஓடி விட்டார். காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விஜயரகு இறந்தார். சம்பவம் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். 10ம் வகுப்பு படித்து, வீட்டிலிருந்த விஜயரகுவின் மகளை, முகமது பாபு ஒருதலையாக காதலித்துள்ளார். மகள் வெளியில் சென்றபோது வழிமறித்து, காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையறிந்த விஜயரகு, முகமது பாபுவை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முகமது பாபு, விஜயரகுவை கத்தியால் குத்தியுள்ளார்; விஜயரகுவின் உறவினர் கிருஷ்ணகுமாரையும் வெட்டியுள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட முகமது பாபு, தற்போது ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஜயரகுவை, முகமது பாபு வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

விஜயரகு கொலையை அடுத்து, 100க்கும் மேற்பட்ட, பா.ஜ.,வினர், காலை, 10:00 மணிக்கு, அரசு மருத்துவமனையில் திரண்டனர். முகமது பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காலை, 11:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில், 30 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விரைவில் கொலையாளியை கைது செய்வதாக கூறினர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஒரு வாரத்தில் 3 கொலை:
திருச்சியில், ஒரு வாரத்தில், மூன்று கொலை சம்பவங்கள் நடந்திருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திருச்சியை அடுத்த களமாவூர் சத்திரத்தில், 22ம் தேதி, அ.தி.மு.க., ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மறு நாள், 23ம் தேதி, உறையூர் பகுதியில், ஆட்டோ டிரைவர் புகழேந்தி, பழிக்கு பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்று, பா.ஜ., பிரமுகர் விஜயரகு கொலை நடந்துள்ளது. ஒரே வாரத்தில், பகல் நேரத்திலேயே, மூன்று கொலை சம்பவங்கள் நடந்திருப்பதால், திருச்சி பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

முஸ்லிம் அமைப்பினர் புகார்:
பா.ஜ., பாலக்கரை மண்டல செயலர் விஜயரகுவை, பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், பா.ஜ.,வினர் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், திருச்சியில் பதற்றம் நிலவியது. அரசு மருத்துவமனை, காந்தி மார்க்கெட் மற்றும் நகரின் முக்கிய இடங்களில், போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, 'முன்விரோத கொலை விவகாரத்தை, பயங்கரவாதம் என, பா.ஜ.,வினர் திசை திருப்புவதாக, முஸ்லிம் அமைப்பினர், போலீஸ் கமிஷனர் வரதராஜுவிடம் புகார் அளித்துள்ளனர்.

'மத மோதல் இல்லை'
பா.ஜ., பிரமுகர் விஜயரகு, தனிப்பட்ட முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். மத ரீதியாக கொலை நடந்ததாக தெரியவில்லை. கொலை சம்பவத்தில், மூன்று பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி.,

மூலக்கதை