மறு ஜென்மம்! கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்: விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
மறு ஜென்மம்! கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்: விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

அவிநாசி:அவிநாசி ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில் நீர்வளம் மேம்படுத்தும் நோக்கில், கவுசிகா நதி புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நொய்யல் ஆற்றின் துணை நதியான கவுசிகா நதி, அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்கலுார், கணியாம்பூண்டி, புதுப்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் என, நான்கு ஊராட்சிகளை கடந்து செல்கிறது.
இந்நதியில், பல இடங்களிலிருந்து வரும் சிற்றோடை மூலம், மழைநீர் செல்கிறது. மழைக்காலங்களில், அதிகளவு மழைநீர், கவுசிகா நதியில் சென்று, நொய்யல் ஆற்றில் கலக்கிறது.இந்நதியில் செல்லும் தண்ணீரை தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்த, பல இடங்களில், முந்தைய காலங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அவற்றை, கடந்தாண்டு, நவம்பர் மாதம் கலெக்டர் கள ஆய்வு செய்தார்.அவரது உத்தரவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் கண்காணிப்பில், வாழும் கலை அமைப்பினரின் உதவியுடன், ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கவுசிகா நதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செல்லும் ஓடைகளில், நீர் செல்லும் பாதை துல்லியமாக கண்டறியப்பட்டது.அங்குள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின், 36 ஆண்டு சராசரி அளவை அடிப்படையாக கொண்டு, மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் அமைவிடம் ஆராயப்பட்டன. ஆய்வு அடிப்படையில், பலவிதமான நீர் சேகரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, தலா, 1.57 லட்சம் ரூபாய் மதிப்பில், 64 மீள் நிரப்பு குழிகள், தலா, 1.36 லட்சம் ரூபாய் மதிப்பில், 32 கம்பி வலையுடன் கூடிய தடுப்பணை கட்டப்பட உள்ளன.இப்பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.இதனை, கலெக்டர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்து கூறுகையில்,''கவுசிகா நதி புனரமைப்பு பணியால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நான்கு ஊராட்சி மக்களின் தனிநபர், பொது ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன் மூலம், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்,'' என்றார்.

மூலக்கதை