சிஏஏ.வுக்கு எதிராக பேசிய ஜேஎன்யு மாணவர் வீட்டில் ரெய்டு: தேசத்துரோக வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
சிஏஏ.வுக்கு எதிராக பேசிய ஜேஎன்யு மாணவர் வீட்டில் ரெய்டு: தேசத்துரோக வழக்குப்பதிவு

ஜெகனாபாத்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக போராட்டம் நடத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரின் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஜெனாபாத்தைச் சேர்ந்தவர் சர்ஜீல் இமாம். மும்பை ஐஐடி-யில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். இவர் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சிஏஏ சட்டத்தால், அசாம் மாநிலம் நாட்டைவிட்டு பிரியும் வாய்ப்பு உள்ளது என கூறினார். இதனால் இவர் மீது அலிகார் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இதே கருத்தை சமூக இணையதளத்திலும் இவர் பரப்பினார். இது வைரலாக பரவியது. இதனால் இவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அசாமில் இவர் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்(ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள சர்ஜீல் இமாம் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சர்ஜீல் இமாம் வீட்டில் இல்லை. அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மத்திய ஏஜன்சிகள் உதவி கேட்டதையடுத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக ஜெகனாபாத் எஸ்.பி மனீஷ் குமார் தெரிவித்தார். இந்த சோதனையால் கோபம் அடைந்த சர்ஜீல் இமாமின் தாய் அப்ஷன் ரகீம் அளித்த பேட்டியில், ‘‘என் மகன் அப்பாவி. அறிவாளி. அவன் திருடன் அல்ல. அவன் எங்கு இருக்கிறான் என கடவுள் மீது ஆணையாக தெரியாது. ஆனால் அவன் விசாரணைக்கு நிச்சயம் ஆஜராகி ஒத்துழைப்பு அளிப்பான் என என்னால் உறுதிபட கூற முடியும். நான் அவனை சந்தித்து வெகுநாள் ஆகிவிட்டது. நாட்டில் சிஏஏ மற்றும் என்ஆர்சி அமல்படுத்தப்படுவதை எண்ணி அவன் நிம்மதியாக இல்லை. அவன் குழந்தை மாதிரி. பிரிவினைக்காக மக்களை தூண்டும் அளவுக்கு அவனால் செயல்பட முடியாது’’ என்றார்.* பீம் ஆர்மி தலைவருக்கு ஐதராபாத்தில் அனுமதி மறுப்புசிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை தூண்டியதாக திகார் சிறையில் அடைக்கப்பட்ட, பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத், சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். அவர் ஐதராபாத்தில் நடைபெறும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, டெல்லியிருந்து நேற்று ஐதராபாத் சென்றார். அவரை போலீசார் மடக்கி, டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். இதுகுறித்து டிவிட்டரில் ஆசாத் வெளியிட்ட தகவலில், ‘‘தெலங்கானாவில் அராஜகம் அதிகமாக உள்ளது. மக்களின் போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. என்னை கைது செய்து, டெல்லிக்கு அனுப்புகின்றனர். இந்த அவமானத்தை பகுஜன் சமூகம் ஒருபோதும் மறக்காது. நான் மீண்டும் திரும்ப வருவேன்’’ என்றார். ஐதராபாத் போலீசார் கூறுகையில், ‘‘சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிரான போராட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை’’ என்றனர்.

மூலக்கதை