மேற்குவங்க பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
மேற்குவங்க பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள சட்டப்பேரவையில் சிஏஏ.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இதுபோன்ற தீர்மானங்களால் பயனில்லை என்றும், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் சிஏஏ.க்கு எதிரான தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘சிஏஏ அரசியல் சட்டத்துக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரானது. இந்த சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதேபோல், தேசிய குடிமக்கள் பதிவேடும் திரும்பப் பெறப்பட வேண்டும்’’ என்றார். இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளும் ஆதரித்தன. ஆனால், பாஜ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* ‘மாநிலங்களின் தீர்மானங்களை புறக்கணிக்க முடியாது’முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, சிஏஏ.வை ரத்து செய்யக் கோரி மும்பை முதல் டெல்லி வரை 3,000 கி.மீ. தூரம் நடத்தும் பேரணி நேற்று உபி.யை வந்தடைந்தது. அப்போது அவர் அளித்த பேட்டியில், ``மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும், ஜனநாயகத்துக்கு எதிரான சிஏஏ. என்ஆர்சி அறிவிப்பினால் அச்சமடைந்துள்ள மக்கள் இவற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். பாஜ அல்லாத மாநில அரசுகளும் இதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. மாநில அரசுகளின் சிஏஏ.வுக்கு எதிரான தீர்மானங்களை புறக்கணிக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை அமல்படுத்தாத மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். அதை செய்தாலும் செய்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு மூளை கலங்கிவிட்டது’’ என்றார்.

மூலக்கதை