டெல்லி போராட்டத்துக்கு போங்க பிரியாணியும், 1000மும் தருவாங்க : வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு வந்த பதிலால் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
டெல்லி போராட்டத்துக்கு போங்க பிரியாணியும், 1000மும் தருவாங்க : வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு வந்த பதிலால் அதிர்ச்சி

துபாய்: வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு, நிறுவனம் அனுப்பிய பதிலில், ‘‘டெல்லியில் சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடக்கும் ஷாகீன்பாக் செல்லுங்கள். அங்கு போராட்டத்தில் கலந்து கொண்டால் தினமும் ரூ.1000ம், டீயும், பிஸ்கட்டும் தருவார்கள்’’ என்று பதில் வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் பெரும் வன்முறை நடந்த ஷாகீன்பாக் பகுதியில் தொடர்ந்து சிஏஏ.வை கண்டித்து இன்னமும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குடியரசு தினவிழாவிலும் கூட அங்கு போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வேலை கேட்டு விண்ணப்பித்த கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா (23) என்பவருக்கு குதர்க்கமான பதில் அனுப்பிய நிறுவனத்தினால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள அப்துல்லா, துபாயில் உள்ள ஒரு வேலை கன்சல்டன்சி நிறுவனத்திடம் வேலை கோரி இமெயிலில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அந்த நிறுவனத்தில் இருந்து ஜெயந்த் கோகலே என்பவர் அனுப்பிய பதிலில், ‘‘நான் ஒன்று நினைக்கிறேன். உங்களுக்கு எதற்கு வேலை? டெல்லிக்கு சென்று ஷாகீன்பாக் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அங்கு தினசரி ரூ.1000மும், இலவசமாக பிரியாணியும் தருவார்கள். மேலும், அவ்வப்போது டீயும்  கிடைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.இதை அப்துல்லா தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி நிறுவனத்துக்கு எதிராக பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கிடையே, தான் அவ்வாறு மெயில் அனுப்பவில்லை என்றும், தன் இமெயில் கடிதம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஜெயந்த் கோகலே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மூலக்கதை